3 நாட்களுக்கு பிறகு ராகுல்காந்தியின் பாதயாத்திரை இன்று மீண்டும் கர்நாடகத்திற்கு வருகிறது; பிரியங்கா காந்தி பங்கேற்பு
ராகுல் காந்தியின் ஒற்றுமை பாதயாத்திரை 3 நாட்களுக்கு பிறகு இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் கர்நாடகத்திற்கு வருகிறது.
பெங்களூரு:
ராகுல் காந்தியின் பாதயாத்திரை
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஒற்றுமை பாதயாத்திரையை கடந்த செப்டம்பர் மாதம் 7-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். கன்னியாகுமரி மாவட்டம் வழியாக அந்த பாதயாத்திரை கேரளாவுக்கு சென்றது. அங்கு 19 நாட்கள் நடைபெற்ற ராகுல்காந்தியின் பாதயாத்திரை அதே மாதம் 30-ந் தேதி கர்நாடகத்திற்கு வந்தது. சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டைக்கு வந்தது. அங்கு அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ராகுல்காந்தியின் பாதயாத்திரை மைசூரு, மண்டியா, துமகூரு, சித்ரதுர்கா, பல்லாரி மாவட்டத்தில் 15 நாட்கள் நடைபெற்றது. கடந்த 18-ந் தேதி முதல் ஆந்திராவில் 3 நாட்கள் அவரது பாதயாத்திரை நடைபெற்றது. இந்த நிலையில் ராகுல் காந்தியின் பாதயாத்திரை மீண்டும் இன்று (வெள்ளிக்கிழமை) கர்நாடகத்திற்கு வருகிறது. ஆந்திராவில் இருந்து ராய்ச்சூர் மாவட்டத்திற்கு வரும் இந்த ஒற்றுமை பாதயாத்திரை அந்த மாவட்டத்தில் 2 நாட்கள் நடைபெற உள்ளது.
பிரியங்கா காந்தி
அதன் பிறகு 23-ந் தேதி ராகுல் காந்தியின் பாதயாத்திரை தெலுங்கானா மாநிலத்திற்கு செல்கிறது. ராய்ச்சூரில் நடைபெறும் பாதயாத்திரையில் பிரியங்கா காந்தி கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து அவர் தெலுங்கானாவில் நடைபெறும் பாதயாத்திரையிலும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.