'ரெயில்வே துறை மிகவும் பலவீனமாகிவிட்டது' - மல்லிகார்ஜுன கார்கே
ரெயில்வே துறை மிகவும் பலவீனமாகிவிட்டதால் அடுத்தடுத்து ரெயில் விபத்துகள் ஏற்படுவதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
ராஜஸ்தான் மாநிலம் மதுரா அருகே இன்று காலை 2.30 மணிக்கு சரக்கு ரெயில் பெட்டிகள் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது. முன்னதாக நேற்றைய தினம் உத்தர பிரதேச மாநிலத்தின் மொராதாபாத் மாவட்டத்தில் சரக்கு ரெயிலின் 7 பெட்டிகள் தடம்புரண்டன. அதற்கு முன்பு கடந்த 18-ந்தேதி, உத்தர பிரதேசத்தின் கோண்டா ரெயில் நிலையம் அருகே சண்டிகர்-திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், ரெயில்வே துறை மிகவும் பலவீனமாகிவிட்டதால் அடுத்தடுத்து ரெயில் விபத்துகள் ஏற்படுவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். இது குறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-
"ரெயில்வே துறை மிகவும் பலவீனமாகிவிட்டதால் அடுத்தடுத்து ரெயில் விபத்துகள் ஏற்படுகின்றன. ரெயில்வே துறையில் லட்சக்கணக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன. முக்கியமான தொழில்நுட்ப பணியிடங்களை நிரப்பாவிட்டால், ரெயில்வே இயல்பாகவே பலவீனமாகிவிடும்.
ரெயில்வே துறைக்கு உரிய நேரத்தில் பணம் கிடைப்பதில்லை. ரெயில் விபத்துகளில் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்துவிட்டனர். அரசு இதைப் பற்றி சிந்திக்க வேண்டும், இல்லையெனில் மக்கள் அவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள்.
இந்த அரசு யாரிடமும் கருத்து கேட்பதில்லை. அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்களோ அதை செய்கிறார்கள். யாருடைய எண்ணங்களையும் கேட்கும் வழக்கம் பா.ஜ.க.விடம் இல்லை. இந்த அரசாங்கம் எப்போதுமே எதிர்க்கட்சிகளை புறக்கணிக்கிறது.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேட்க விரும்பும் கேள்விகளை கேட்க ஒருபோதும் வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. ஏனெனில் பா.ஜ.க. அரசு தனது தோல்விகளைப் பற்றி மக்கள் தெரிந்து கொள்வதை விரும்புவதில்லை."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.