ஒடிசா ரெயில் விபத்து - உதவி எண்கள் அறிவிப்பு


ஒடிசா ரெயில் விபத்து - உதவி எண்கள் அறிவிப்பு
x

ஒடிசா ரெயில் விபத்தில் 101 பேரின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

புவனேஷ்வர்,

மேற்குவங்காளத்தின் கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமாரில் இருந்து சென்னை சென்டிரல் நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 2) வந்துகொண்டிருந்தது. அதேபோல், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து மேற்குவங்காளத்தின் ஹவுரா நோக்கி சூப்பர் பாஸ்ட் ரெயில் சென்றுகொண்டிருந்தது.

அப்போது ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தின் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே இரவு 7 மணியளவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்துகொண்டிருந்தது. அப்போது, ஒதுக்கப்பட்ட தண்டவாளத்தில் இருந்து தடம் மாறி சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ் சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான வேகத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகள் தடம்புரண்டு அருகில் உள்ள தண்டவாளத்தில் விழுந்தன. அப்போது அந்த தண்டவாளத்தில் அதிவேகமாக வந்த பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் கோரமண்டல் ரெயில் பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர். மேலும், 1 ஆயிரத்து 100 பேர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், ரெயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி, ரெயில் விபத்தில் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இதன் மூலம் பலி எண்ணிக்கை 278 ஆக அதிகரித்துள்ளதாக ரெயில்வே தெரிவித்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களில் 177 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் 101 பேரின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் அந்த உடல்கள் 6 மருத்துவமனைகளில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ரெயில்வே தரப்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஒடிசா ரெயில் விபத்தில் பாதிக்கப்பட்ட உறவினர்களைக் கண்டறிய ரெயில்வே ஹெல்ப்லைன் எண்களை வெளியிட்டுள்ளது. 139, 18003450061 அல்லது 1929 என்ற உதவி எண்களுக்கு அழைத்து பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவல்களை அளிக்கலாம் என்று ரெயில்வேத்துறை தெரிவித்துள்ளது.

1 More update

Next Story