கர்நாடகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்யும்


கர்நாடகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்யும்
x

கர்நாடகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெங்களூரு:

கர்நாடகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடகத்தில் குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் நேற்று காலை முதலே லேசான சாரல் மழை பெய்தது. அவ்வப்போது மழை விட்டு விட்டு பெய்தபடி இருந்தது. இதனால் நகரில் குளிர் காற்று வீசியது. மக்கள் 'ஸ்வெட்டர்' அணிந்தபடியும், குடை பிடித்தபடியும் சாலைகளில் நடந்து சென்றதை பார்க்க முடிந்தது.

இந்த சாரல் மழையால் நகரவாசிகளின் அன்றாட இயல்பு வாழ்க்கையில் லேசான பாதிப்பு ஏற்பட்டது. தெருவோர கடை வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் கர்நாடகத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் மேலும் 4 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து அந்த வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பலவீனம் அடைந்தது

வங்க கடலில் தமிழ்நாடு-புதுச்சேரிக்கு இடையே தீவிர காற்றழுத்த மண்டலம் உருவாகி இருந்தது. அது தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக பலவீனம் அடைந்துள்ளது. ஆனால் அதன் தாக்கம் காரணமாக கர்நாடகத்தில் தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வட கர்நாடகத்தின் ஒரு சில மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும். நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் சாம்ராஜ்நகரில் 30 மில்லி மீட்டர் மழையும், பெங்களூருவில் 3 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது. வருகிற 16-ந் தேதி வங்க கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது. இதனால் கர்நாடகத்தில் மழை பெய்யக்கூடும்.

வானம் மேகமூட்டம்

பெங்களூருவை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டமாக காணப்படும். சில நேரங்களில் லேசான மழை பெய்யும். பெங்களூருவில் குளிர் அதிகரித்துள்ளது. நகரில் காற்று 20 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் குளிர் அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் இந்த குளிர் மேலும் அதிகரிக்கும்.

இவ்வாறு வானிலை மையம் கூறியுள்ளது.

மைசூருவில் மழை

மைசூருவில் கடந்த சில தினங்களாக கடும் ெவயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நகரில் வானில் கருமேகங்கள் திரண்டு மழை பெய்யும் சூழல் நிலவியது. பின்னர் மாலையில் லேசான சாரல் மழை பெய்தது. மேலும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலையும் நிலவியது. இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக மைசூரு நகரில் சாரல் மழை பெய்தது.

பகல் முழுவதும் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. மேலும் கடுமையான குளிரும் நிலவியது. நகரில் தொடர்ந்து சாரல் மழை பெய்து கொண்டிருந்ததால் சாலையோர வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மைசூரு நகரில் குளிர் நிலவி வருவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.


Related Tags :
Next Story