கர்நாடகத்தில் இன்னும் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்; வானிலை ஆய்வு மையம் தகவல்


கர்நாடகத்தில் இன்னும் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்; வானிலை ஆய்வு மையம் தகவல்
x

கர்நாடகத்தில் இன்னும் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெங்களூரு:

தென்மேற்கு பருவமழை

கர்நாடகத்தில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆனால் அந்த மாதத்தில் சரியாக மழை பெய்யவில்லை. பின்னர் ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்தது. அந்த மழை மாநிலத்தையே புரட்டிப்போட்டது. குறிப்பாக கர்நாடக மலைநாடு மாவட்டங்களான சிவமொக்கா, சிக்கமகளூரு, ஹாசன், குடகு ஆகிய மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களாக உடுப்பி, உத்தர கன்னடா, தட்சிண கன்னடா ஆகிய மாவட்டங்களிலும் தொடர் கனமழை கொட்டி தீர்த்தது.

தொடர் கனமழை காரணமாக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர்(கே.ஆர்.எஸ்.), கபினி, ஹேமாவதி உள்ளிட்ட அனைத்து அணைகளும் நிரம்பிவிட்டன. இந்த நிலையில் மழை சற்று ஓய்ந்திருந்தது. தற்போது மீண்டும் மாநிலத்தில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய சிறப்பு இயக்குனர் பிரகாஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

20 மில்லி மீட்டர் வரை...

கர்நாடகத்தில் இன்று முதல் மீண்டும் மழை பெய்யக்கூடும். இன்று முதல் வருகிற 25-ந் தேதி வரை மாநிலத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும். பின்னர் 26 முதல் 29-ந் தேதி வரை சாதாரண மழை பெய்யக்கூடும். இந்த முறை கர்நாடகத்தில் 10 முதல் 20 மில்லி மீட்டர் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story