டெல்லியில் இடியுடன் கூடிய கனமழை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி
வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவினாலும், மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது.
புதுடெல்லி,
டெல்லியில் கடந்த சில வாரங்களாக வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெப்ப அலை வீசி வருவதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். டெல்லியில் அதிகபட்சமாக 49 டிகிரி செல்சியைசை தாண்டி வெப்பம் பதிவானது. இந்த நிலையில், இன்று காலை டெல்லியில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது. இதனால், வெப்பத்தின் தாக்கத்தில் தவித்த மக்களுக்கு சற்று நிம்மதி கிடைத்தது. இன்று காலை வெப்பை நிலை 18 டிகிரி செல்சியசில் இருந்து 29 டிகிரி செல்சியஸ் வரை பதிவானது.
வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவினாலும், மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. நகரின் பிரதான சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டதால் உரிய நேரத்திற்கு அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டனர். பல இடங்களில் மரங்களும் சாய்ந்து விழுந்தன. மழை தொடர்பான சம்பவங்களில் 8 பேர் காயம் அடைந்ததாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது.