நிலப்பிரச்சினை: சகோதரனை 8 முறை டிராக்டர் ஏற்றி கொடூரமாக கொன்ற நபர் - அதிர்ச்சி வீடியோ
நிலப்பிரச்சினையில் சகோதரனை டிராக்டரை ஏற்றி கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூரில் பகதூர் சிங் மற்றும் அவரது சகோதரன் அதர் சிங் இடையே நீண்டகாலமாக நிலப்பிரச்சினை நீடித்து வந்தது.
இதனிடையே, பகதூர் சிங்கின் குடும்பத்தினர் இன்று காலை டிராக்டருடன் பிரச்சினைக்குரிய நிலப்பகுதிக்கு சென்றுள்ளனர். பகதூர் சிங் வருவதை அறிந்த அதர் சிங் தனது குடும்பத்துடன் சென்றுள்ளார்.
அப்போது, சர்ச்சைக்குரிய நிலத்தில் பகதூர் சிங்கின் மகன் தாமோதர் டிராக்டரால் உழுதுள்ளார். இதற்கு அதர் சிங்கின் மகனும், தாமோதரின் சகோதரனுமான நிர்பத் எதிர்ப்பு தெரிவித்து டிராக்டர் முன் நின்றுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தாமோதர் டிராக்டரை முன்னும், பின்னும் வேகமாக இயக்கியுள்ளார். இதில், நிர்பத் டிராக்டருக்குள் சிக்கிக்கொண்டார். வேகமாக இயக்கியதில் டிராக்டரின் டயர் நிர்பத் மீது 8 முறை ஏறி இறங்கியது.
இந்த கோர சம்பவத்தில் நிர்பத் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தார். இதை தடுக்க சென்ற குடும்ப உறுப்பினர்கள் 10க்கும் மேற்பட்டோர் டிராக்டர் மோதி படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் டிராக்டரை ஏற்றி சகோதரன் நிர்பத்தை கொடூரமாக கொலை செய்த தாமோதரை கைது செய்தனர். மேலும், படுகாயமடைந்த குடும்ப உறுப்பினர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.