ராஜஸ்தானில் ஆசிரியர் தேர்வு வினா தாள் கசிவு விவகாரம்; முக்கிய குற்றவாளியின் வீடு இடித்து தரைமட்டம்


ராஜஸ்தானில் ஆசிரியர் தேர்வு வினா தாள் கசிவு விவகாரம்; முக்கிய குற்றவாளியின் வீடு இடித்து தரைமட்டம்
x

ராஜஸ்தானில் ஆசிரியர் தேர்வுக்கான வினா தாள் கசிவு விவகாரத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியின் வீடு இடித்து தள்ளப்பட்டு உள்ளது.



ஜெய்ப்பூர்,


ராஜஸ்தானில் 2-ம் நிலை ஆசிரியர் தேர்வுக்கான வினா தாள் கசிவு விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான பூபேந்திரா சரண் உள்பட 4 பேர் மீது அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து உள்ளது. முதல்-மந்திரி அசோக் கெலாட் உத்தரவின்பேரில் அவர்கள் 4 பேரும் அரசு வேலையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

இவர்களில் முக்கிய குற்றவாளியான, அரசால் தேடப்பட்டு வரும் சரணின் வீடு சட்டவிரோத வகையில், அத்துமீறி கட்டப்பட்டு உள்ளது என்ற குற்றச்சாட்டின் பேரில், அதனை ஜெய்ப்பூர் வளர்ச்சி கழகம் இடித்து தள்ளுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டது.

இந்த பணியில் ஈடுபட்ட ஜெய்ப்பூர் வளர்ச்சி கழகத்தின் தலைமை அமலாக்க பிரிவு அதிகாரி கூறும்போது, இந்த நடவடிக்கையில், சட்டப்படி கட்டப்பட்டு உள்ள பிறரது சொத்துகளுக்கு எந்தவித பாதிப்புகளும் ஏற்படாத வகையில் அதிக கவனமுடன் பணி மேற்கொள்ளப்படுகிறது என்று கூறியுள்ளார்.

இதன்படி, அந்த கழகத்தின் அமலாக்க பிரிவு, ஜெய்ப்பூரில் உள்ள அவரது வீட்டை இடித்து தள்ளியுள்ளது. மாநில இளைஞர்களின் வருங்காலத்துடன் விளையாடும் தீய எண்ணம் கொண்ட நபர்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கையை ராஜஸ்தான் அரசு தொடரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story