மேற்கு வங்காளம் ராமநவமி ஊர்வலத்தில் வன்முறை: ஆளுநரிடம் நிலைமையை கேட்டறிந்த அமித்ஷா...!


மேற்கு வங்காளம் ராமநவமி ஊர்வலத்தில் வன்முறை: ஆளுநரிடம் நிலைமையை கேட்டறிந்த அமித்ஷா...!
x

ராமநவமியை முன்னிட்டு மேற்கு வங்கத்தின் ஹவுரா மாநகரில் நடைபெற்ற ராமநவமி ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட்ட நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, அம்மாநில ஆளுநரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிந்தார்.

கொல்கத்தா,

மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாநகரில் ராமநவமியை முன்னிட்டு நேற்று மாலை ஊர்வலம் நடைபெற்றது. அப்போது, காசிபரா என்ற இடத்தில் ஊர்வலத்தில் பங்கேற்றவர்களுக்கு எதிராக மற்றொரு பிரிவினர் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். அதோடு, அங்கிருந்த கடைகளையும் சூறையாடினர். இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். சம்பவத்தின்போது காவல்துறை வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன.

இதையடுத்து, கலவரக்காரர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு 36 பேர் கைது செய்யப்பட்டனர். அங்கு அமைதி திரும்பிய நிலையில், ஷிப்பூர் பகுதியில் இன்று மீண்டும் மோதல் ஏற்பட்டது. கலவரத்திற்கு ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியே காரணம் என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்பி லாக்கெட் சாட்டர்ஜி,

''ஒவ்வொரு ராமநவமி மற்றும் துர்கா பூஜையின்பேதும் இந்துக்கள் தாக்கப்படுவது வழக்கமாகி வருகிறது. மேற்கு வங்கத்தில் இந்துக்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இதை ஏற்க முடியாது. ஹவுராவில் நேற்று கலவரம் நிகழ்ந்தபோது முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அமைதியாக அமர்ந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுவந்தார் இந்த விவகாரத்தில் மம்தா பானர்ஜி உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்'' என வலியுறுத்தினார்.

இந்தநிலையில், இந்த கலவரம் தொடர்பாக மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸிடம் தொலைபேசியில் உரையாடிய உள்துறை மந்திரி அமித் ஷா, கலவரம் தொடர்பாகவும், அதை அடுத்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைள் தொடர்பாகவும் கேட்டறிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கலவரம் பாதித்த பகுதிகளுக்கு விரைவில் சென்று ஆய்வு செய்ய உள்ளதாகவும் ஆளுநர், வன்முறை மற்றும் களத்தில் நிலவும் தற்போதைய நிலைமை குறித்த விவரங்களை அமித்ஷாவிடம் விளக்கியதாக கூறப்படுகிறது.

1 More update

Next Story