'கர்நாடகத்தின் 10-வது முதல்-மந்திரி ராமகிருஷ்ண ஹெக்டே


கர்நாடகத்தின் 10-வது முதல்-மந்திரி ராமகிருஷ்ண ஹெக்டே
x

கர்நாடகத்தில் 10-வது முதல்-மந்திரியாக ராமகிருஷ்ண ஹெக்டே பொறுப்பு வகித்தார்.

கர்நாடக மாநிலத்தில் 10-வது முதல்-மந்திரியான ராமகிருஷ்ண ஹெக்டே உத்தரகன்னடா மாவட்டம் சித்தாபுராவில் கடந்த 1926-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி பிறந்தார். காசி வித்யாபாத்தில் கல்வி பயின்ற இவர், தனது சட்ட படிப்பை அலகாபாத் சட்டகல்லூரியில் முடித்தார். இதைதொடர்ந்து வக்கீலாக பணியாற்றி வந்த இவர் கடந்த 1942-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டு சுதந்திர போராட்டத்தில் பங்குபெற்றார்.

மேலும் கடந்த 1954-ம் ஆண்டு முதல் 1957-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் உத்தரகன்னடா மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்தார். 1957-ம் ஆண்டு எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றார். இவர் முதல்-மந்திரிகளான நிஜலிங்கப்பா, வீரேந்திர பட்டீல் ஆகியோரின் மந்திரி சபையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு, கூட்டுறவு, தொழில்துறை, பஞ்சாயத்து ராஜ், கலால்துறை உள்ளிட்ட துறைகளின் மந்திரியாக பதவி வகித்து உள்ளார்.

மேலும் கடந்த 1969-ம் ஆண்டு காங்கிரஸ் உடைந்த போது இந்திய தேசிய காங்கிரஸ்(ஸ்தாபனம்) கட்சியில் இவர் ஐக்கியமானார். நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட போது ஜனதா கட்சியுடன் தன்னை இணைத்து கொண்ட இவர், அப்போது கர்நாடக மாநில பொது செயலாளராக பதவி வகித்தார். இதைதொடர்ந்து கடந்த 1983-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு முதல்-மந்திரியாக பொறுப்பேற்றார்.

மேலும் இவரது தலைமையிலான மைனாரிட்டி ஆட்சிக்கு பா.ஜனதா, கம்யூனிஸ்டுகள், 16 சுயேச்சைகள் அப்போது வெளியில் இருந்து ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவரது தலைமையிலான மோசமான ஆட்சியலால் 1984-ம் ஆண்டு நடைபெற்ற பொதுதேர்தலில் ஜனதா கட்சி படுதோல்வி அடைந்து. அதாவது மொத்தம் இருந்த 28 தொகுதிகளில் அந்த கட்சி 4 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது.

இந்த தோல்விக்கு பொறுப்பேற்று ராமகிருஷ்ண ஹெக்டே தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதைதொடர்ந்து கடந்த 1983, 1985-ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. அப்போது ஜனதா கட்சி சார்பில் மீண்டும் ராமகிருஷ்ண ஹெக்டே முதல்-மந்திரியாக பதவி வகித்தார். இவரது ஆட்சி காலத்தில் தான் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு நிதி மற்றும் நிர்வாக அதிகாரம் வழங்கப்பட்டது.

மேலும் நிர்வாகத்தில் ஏற்படும் ஊழல்களை விசாரிக்க லோக்-அயுக்தா அமைப்பும் உருவாக்கப்பட்டது. திறமையான ஆட்சி நிர்வாகத்தை கொடுத்த ஹெக்டே, தனது குடும்பத்தினராலேயே ஊழல் புகார்களில் சிக்கி அவப்பெயரை சம்பாதிக்க நேரிட்டது. மருத்துவ சீட் வழங்க பணம் பெற்றது உள்ளிட்ட சில வழக்குகளில் ஹெக்டேவின் மகன் மீது குற்றம் சாட்டப்பட்டது. மேலும் மதுவிற்பனையை அரசே ஏற்று நடத்தும் என்ற இவரது முடிவுக்கு கர்நாடக ஐகோர்ட்டு எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த 1988-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ந் தேதி ஹெக்டே முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

ஆனால் அந்த முடிவை அடுத்த 3 நாட்களில் ஹெக்டே திரும்ப பெற்றது குறிப்பிடத்தக்கது. அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் தொழில் அதிபர்களின் தொலைபேசிகள் ஒட்டுகேட்பு விவகாரம் காரணமாக கடந்த 1988-ம் ஆண்டு இவர் தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். தேசிய அரசியலிலும் கொடி கட்டி பறந்த இவர், கடந்த 1978 முதல் 1996 வரையிலான காலகட்டத்தில் டெல்லி மேல்சபை உறுப்பினராக பதவி வகித்து உள்ளார்.

மேலும் ஜனதா கட்சியில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த 1996-ம் ஆண்டு அதில் இருந்து விலகிய ஹெக்டே லோக் ஜனசக்தி என்ற கட்சியை தொடங்கினார். மேலும் 1998-ம் ஆண்டு நடைபெற்ற பொது தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்த இவர் கர்நாடகத்தில் பெரும்பாலான இடங்களை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இதைதொடர்ந்து வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் மந்திரியாக பதவி வகித்து உள்ளார். கடந்த 1999-ம் ஆண்டு ஜனதா கட்சி இரண்டாக உடைந்ததை தொடர்ந்து ஹெக்டே தனது கட்சியை ஐக்கிய ஜனதாதளம் கட்சியுடன் இணைத்தார்.

மேலும் அந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இந்த அணி, பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. ஆனால் ஆட்சியின் மீது மக்களுக்கு இருந்த கடும் வெறுப்பு காரணமாக அப்போது காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று மாநிலத்தில் ஆட்சியை அமைத்தது குறிப்பிடத்தக்கது. இதைதொடர்ந்து அரசியல் வாழ்க்கையில் சறுக்கலை சந்திக்க தொடங்கிய ஹெக்டே உடல்நலக்குறைவால் கடந்த 2004-ம் ஆண்டு ஜனவரி மாதம் 12-ந் தேதி உயிர் இழந்தார்.


Next Story