சட்டசபை தோ்தல் நெருங்கி வருவதால் ரமேஷ் ஜார்கிகோளி குழப்பத்தில் உள்ளார்


சட்டசபை தோ்தல் நெருங்கி வருவதால் ரமேஷ் ஜார்கிகோளி குழப்பத்தில் உள்ளார்
x

சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால் ரமேஷ் ஜார்கிகோளி குழப்பத்தில் உள்ளார் என்று காங்கிரஸ் செயல் தலைவர் ராமலிங்க ரெட்டி குற்றம்சாட்டி உள்ளார்.

ஆனேக்கல்:-

குழப்பமான அறிக்கை

பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா சந்தாப்புராவில் காங்கிரஸ் செயல் தலைவர் ராமலிங்கரெட்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால் ரமேஷ் ஜார்கிகோளி குழப்பமாக உள்ளார். இதனால் அவர் குழப்பமான அறிக்கையை ெவளியிட்டு வருகிறார். ரமேஷ் ஜார்கிகோளி சி.டி. அரசியல் செய்யாமல், வளர்ச்சி அரசியல் செய்ய வேண்டும்.

ஆபாச சி.டி. பின்னணியில் பா.ஜனதாவினர் உள்ளதாக அக்கட்சியை சேர்ந்த யத்னால் எம்.எல்.ஏ.வே தெரிவித்துள்ளார். இதனால் ரமேஷ் ஜார்கிகோளி குழப்பமான அறிக்கையை வெளியிட வேண்டாம். தேவையில்லாமல் காங்கிரசார் மீது பழி சுமத்த வேண்டாம்.

பா.ஜனதாவினர் பதற்றம்

கூட்டுறவு துறையில் முறைகேடு நடந்துள்ளதாக ரமேஷ் ஜார்கிகோளி குற்றம்சாட்டி உள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜனதா தான் ஆட்சியில் உள்ளது. இதனால் இந்த முறைகேடு குறித்து கூட்டுறவு துறை மந்திரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேர்தல் ஆதாயத்திற்காக டி.கே.சிவக்குமார் மீது அவர் குற்றம்சாட்டுகிறார். டி.கே.சிவக்குமாரின் வேகத்தை கண்டு பா.ஜனதாவினர் பதற்றம் அடைந்துள்ளனர்.

மாநில அரசின் பணிகளை ஐகோர்ட்டு கண்டிக்கும் நிலை உள்ளது. சாலை பள்ளங்கள், ஹிஜாப் வழக்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து அரசுக்கு ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனாலும் வளர்ச்சி பணிகளில் பா.ஜனதா அரசு அக்கறையுடன் செயல்படவில்லை.

40 சதவீத கமிஷன்

மாநிலம் முழுவதும் 40 சதவீதம் கமிஷன் புகார் உள்ளது. ஆனால் இதுபற்றி பிரதமர் மோடி வாய் திறக்காமல் உள்ளார். சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் அடிக்கடி கர்நாடகம் வருகிறார்கள். தேர்தலுக்கு பிறகு அவர்கள் கர்நாடகத்தை திரும்பி கூட பார்க்க மாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story