உத்தரகாண்ட் சுரங்க மீட்புப் பணிக்கான ஊதியம் போதாது; 'எலி வளை' தொழிலாளர்கள் அதிருப்தி


உத்தரகாண்ட் சுரங்க மீட்புப் பணிக்கான ஊதியம் போதாது; எலி வளை தொழிலாளர்கள் அதிருப்தி
x

கூடுதல் ஊதியம் வழங்கப்படாவிட்டால் காசோலையை அரசிடம் திருப்பி அளிக்க இருப்பதாக எலி வளை தொழிலாளர்கள் கூறியுள்ளனர்.

டேராடூன்,

உத்தரகாண்டில் சில்க்யாரா- பர்கோட் இடையே அமைக்கப்பட்ட சுரங்கப் பாதையில் கடந்த நவம்பர் 12-ம் தேதி மண் சரிவு ஏற்பட்டது. இதில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். இந்த தொழிலாளர்களை மீட்கும் பணியில் எலி வளை தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். 12 'எலி வளை' தொழிலாளர்கள் உயிரை பணயம் வைத்து சுரங்கப்பாதையை துளையிட்டு குழாய்களை பொருத்தினர். அவர்கள் அமைத்த குழாய் பாதை வழியாக கடந்த நவம்பர் 28-ம் தேதி 41 தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். உத்தரகாண்ட் அரசு சார்பில் 12 'எலி வளை' தொழிலாளர்களுக்கும் தலா ரூ.50,000-க்கான காசோலை வழங்கப்பட்டது.

எனினும், தங்களுக்கு வழங்கப்பட்ட இந்த ஊதியம் போதாது என்று எலி வளை தொழிலாளர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், " ஒட்டுமொத்த இந்தியர்களும் சுரங்க தொழிலாளர்களை மீட்க பிரார்த்தனை செய்தனர். மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் பல நாட்கள் போராடி பெரிதாக முன்னேற்றம் ஏற்படவில்லை. இக்கட்டான சூழலில் உயிரை பணயம் வைத்து நாங்கள் சுரங்கத்தை தோண்டி 41 தொழிலாளர்களை மீட்க வழி செய்தோம்.

எங்களுக்கு ஊதியமாக ரூ.50,000-க்கான காசோலை வழங்கப்பட்டது. உத்தரகாண்ட் முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி முன்னிலையிலேயே எங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினோம். அப்போது கூடுதல் ஊதியம் வழங்கப்படும் என்று அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதுவரை கூடுதல் ஊதியத்துக்கான எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஒருவேளை கூடுதல் ஊதியம் வழங்கப்படாவிட்டால் காசோலையை அரசிடம் திருப்பி அளிப்போம்" என்று கூறினர்.

1 More update

Next Story