ஆர்.பி.ஐ. பக்கம் போக தேவையில்லை.. 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற இப்படியும் ஒரு வழி இருக்கு


ஆர்.பி.ஐ. பக்கம் போக தேவையில்லை.. 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற இப்படியும் ஒரு வழி இருக்கு
x
தினத்தந்தி 6 Nov 2023 9:03 AM GMT (Updated: 6 Nov 2023 9:56 AM GMT)

2,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கும் மாற்றுவதற்கும் ரிசர்வ் வங்கியின் 19 மண்டல அலுவலகங்களிலும் வசதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் 19ஆம் தேதி அறிவித்தது. 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிக் கிளைகளில் டெபாசிட் செய்யலாம் அல்லது ரொக்கமாக மாற்றிக்கொள்ளலாம் என அறிவித்து, செப்டம்பர் 30ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கியது. பின்னர் இந்த அவகாசம் அக்டோபர் 7ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

அவகாசம் நிறைவு

இந்த கால அவகாசம் முடிவடைந்த நிலையில், பொதுமக்களால் வங்கிகளில் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாது. அதேசமயம், ரிசர்வ் வங்கியின் மண்டல அலுவலகங்களில் மாற்றிக்கொள்ளலாம். ஒரு சில மண்டல அலுவலகங்களில் இன்னும் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு மக்கள் வந்தவண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் மண்டல அலுவலகங்களுக்கு செல்லாமலேயே மக்கள் தங்களிடம் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியும். இதற்காக இந்திய தபால் சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதற்கான விண்ணப்ப படிவத்தையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டது. தபால் மூலம் அனுப்பப்படும் 2,000 ரூபாய் நோட்டுகள், சம்பந்தப்பட்ட நபர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

எனவே, மக்கள் நீண்ட தூரம் பயணித்து மண்டல அலுவலகத்திற்கு சென்று வரிசையில் காத்திருக்க தேவையில்லை. அருகில் இருக்கும் தபால் நிலையத்தில் இருந்தே 2,000 ரூபாய் நோட்டுக்களை அனுப்பி தங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்க முடியும்.

தபால் மூலம் எப்படி அனுப்புவது?

நாட்டில் உள்ள எந்த தபால் நிலையத்தில் இருந்தும் 2,000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியின் வெளியீட்டு அலுவலகங்களுக்கு(RBI issue offices) அனுப்பலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்ப படிவத்தை ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பப் படிவத்திற்கு கிளிக் செய்க.. https://rbidocs.rbi.org.in/rdocs/content/pdfs/Application01112023.pdf

தேவையான ஆவணங்கள்:

ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், தேசிய ஊரக வேலை உறுதி திட்ட அட்டை, பான் கார்டு, அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, வங்கி கணக்கு விவரங்கள்.

ரிசர்வ் வங்கி மண்டல அலுவலகங்கள்

2,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கும் மாற்றுவதற்கும் புதுடெல்லி, சென்னை, அகமதாபாத், பெங்களூரு, பேலாபூர், போபால், புவனேஸ்வர், சண்டிகர், கவுகாத்தி, ஐதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், பாட்னா, திருவனந்தபுரம் என ரிசர்வ் வங்கியின் 19 மண்டல அலுவலகங்களிலும் வசதி செய்யப்பட்டுள்ளது.


Next Story