அரசு ஆஸ்பத்திரியில் 36 கொரோனா நோயாளிகள் இறப்பு குறித்து மீண்டும் விசாரணை; சுகாதாரத்துறை மந்திரி தினேஷ் குண்டுராவ்
சாம்ராஜ்நகர் அரசு ஆஸ்பத்திரியில் ஒரே நாளில் மூச்சு திணறி 36 கொரோனா நோயாளிகள் இறந்தது குறித்து மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்று சுகாதாரத்துறை மந்திரி தினேஷ் குண்டுராவ் கூறியுள்ளார்.
பெங்களூரு:
சுகாதாரத்துறை மந்திரி தினேஷ் குண்டுராவ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மத விரோத போக்கு
கர்நாடகத்தில் முந்தைய பா.ஜனதா ஆட்சியின் ஒவ்வொரு முடிவிலும் மத விரோத போக்கு காணப்பட்டது. பள்ளி பாடத்திட்டத்தில் மதம் சார்ந்த விஷயங்களை சேர்த்தனர். அரசு பணிகளில் தங்களுக்கு தேவையானவர்களை நியமித்தனர். பாடத்திட்டத்தை மாற்றுகிறோம் என்ற பெயரில் திட்டமிட்டே வரலாற்றை திரித்துக் கூறும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மதங்கள் இடையே விரோதத்தை வளர்ப்பது தான் பா.ஜனதாவின் அடிப்படை நோக்கம். தமது கட்சி மற்றும் கொள்கைகளை வளர்த்துக்கொள்ள அரசு எந்திரத்தை பா.ஜனதாவினர் தவறாக பயன்படுத்தினர். ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்பரிவார் அமைப்புகளுக்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஒதுக்கினர். அதுகுறித்து முடிவுகளை நாங்கள் மறுபரிசீலனை செய்வோம்.
முழுமையான விவரங்கள்
குழந்தைகளிடம் மத விஷயங்களை விதைப்பது சரியல்ல. நாங்கள் இந்த தவறுகளை சரிசெய்ய பாடத்திட்டத்தை மாற்ற முடிவு செய்துள்ளோம். எனது துறை பற்றி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி விவரங்களை சேகரித்து வருகிறோம். முழுமையான விவரங்கள் கிடைத்த பிறகு எனது துறை குறித்து பேசுகிறேன். ஆரோக்கிய கவச் 108 உதவி மைய டெண்டர் ரத்து செய்துள்ளோம்.
அது போல் இன்னும் சில டெண்டர்களை சுகாதாரத்துறையில் ரத்து செய்துள்ளோம். சுகாதாரத்துறையை மேலும் பலப்படுத்த வேண்டியுள்ளது. கொரோனா நெருக்கடியின்போது, சாம்ராஜ்நகர் அரசு ஆஸ்பத்திரியில் ஒரே நாளில் மூச்சு திணறி 36 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்ததாக அப்போது கூறினர். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டது. நாங்கள் இந்த சம்பவம் குறித்து மீண்டும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு தினேஷ் குண்டுராவ் கூறினார்.