எனது உயிரை கொடுக்க தயார்; ஆனால் நாட்டை பிரிக்க விடமாட்டேன்: மம்தா பானர்ஜி சூளுரை


எனது உயிரை கொடுக்க தயார்; ஆனால் நாட்டை பிரிக்க விடமாட்டேன்:  மம்தா பானர்ஜி சூளுரை
x

எனது உயிரை கொடுக்க தயாராக இருக்கிறேன் என்றும் ஆனால் நாட்டை பிரிக்க விடமாட்டேன் என்றும் மம்தா பானர்ஜி சூளுரைத்துள்ளார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நடந்த கூட்டத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசினார். அவர் கூறும்போது, ரம்ஜான் பண்டிகையை ஒவ்வொருவரும் மகிழ்வுடன் கொண்டாடுங்கள்.

உங்கள் அனைவருக்கும் ரம்ஜான் பண்டிகை வாழ்த்துகள். நீங்கள் பயப்படாதீர்கள். உங்களுக்கு யாரும் தீங்கு செய்து விட முடியாது. நாம் ஒன்றாகவே இருப்போம். நாட்டை கட்டியெழுப்புவோம். உலகையும் ஒன்றாக நாம் கட்டமைப்போம். போராடி அதில் நாம் வெற்றி பெறுவோம் என்று பேசியுள்ளார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, நாட்டில் சிலர் பிரிவினையை உண்டாக்க விரும்புகிறார்கள். ஆனால், வங்காளத்தில் அமைதி தொடர வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். எங்களுக்கு மோதல்கள் தேவையில்லை. அமைதியே வேண்டும் என கூறியுள்ளார்.

அப்படி நாட்டில் பிரிவினையை உண்டாக்க விரும்புகிறவர்களுக்கு நான் கூறுவது என்னவென்றால், ரம்ஜான் நாளில் நான் உறுதி கூறுகிறேன். என்னுடைய வாழ்க்கையை தர நான் தயாராக இருக்கிறேன். ஆனால், நாட்டில் பிரிவினையை நான் அனுமதிக்க மாட்டேன் என கூறியுள்ளார்.

சமீபத்தில் சில வாரங்களுக்கு முன்பு மேற்கு வங்காளத்தில் ராமநவமி கொண்டாட்டங்கள் நடந்தன. அப்போது ஏற்பட்ட வன்முறை பல நாட்களுக்கு நீடித்தது. போலீசார் தடையுத்தரவுகளை பிறப்பித்தனர். இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டது. அதன்பின்பு இயல்வு நிலை திரும்பியது.


Next Story