ரியல் எஸ்டேட் அதிபர் மர்மசாவு வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்-ஐகோர்ட்டு உத்தரவு
ரியல் எஸ்டேட் அதிபர் மர்மசாவு வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு: பெங்களூரு எச்.ஏ.எல். போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் ரங்கநாத். இவரும், ஆதிகேசவல் என்பவரும் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்தார்கள். 2013-ம் ஆண்டு ஆதிகேசவலு இறந்து விட்டார். அதன்பிறகு, ரங்கநாத் மட்டும் தனியாக ரியல்எஸ்டேட் தொழில் செய்தார். அதே நேரத்தில் தனது தந்தை ஆதிகேசவலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் சொத்தை ரங்கநாத் அபகரித்து விட்டதாக சீனிவாஸ் குற்றச்சாட்டு கூறி இருந்தார். இதற்கிடையில், கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் 4-ந் தேதி தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி ரங்கநாத்தின் மனைவி எச்.ஏ.எல். போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், ரங்கநாத் தற்கொலை செய்திருப்பதாக கூறினார்கள்.இதனை எதிர்த்து பெங்களூரு கோர்ட்டில் மஞ்சுளா வழக்கு தொடர்ந்தார். அதன்படி, கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த வழக்கு விசாரணை தாமதமாக நடந்து வருவதாக கூறி கர்நாடக ஐகோர்ட்டில் மஞ்சுளா மேல் முறையீடு செய்ததுடன், கணவர் சாவு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடும்படி வலியுறுத்தி இருந்தார். இந்த மனுவை விசாரித்த கர்நாடக ஐகோர்ட்டு ரங்கநாத் சாவு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளது.