நேரு முதல் மன்மோகன் சிங் அரசு வரை காங்கிரஸ் உருவாக்கிய சொத்துக்கள் பாஜக அரசால் விற்கப்பட்டுள்ளன - மல்லிகார்ஜூன கார்கே


நேரு முதல் மன்மோகன் சிங் அரசு வரை காங்கிரஸ் உருவாக்கிய சொத்துக்கள் பாஜக அரசால் விற்கப்பட்டுள்ளன - மல்லிகார்ஜூன கார்கே
x

காங்கிரஸ் கட்சியின் உண்மையான போராட்டம் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்க்கு எதிரானது என்று மல்லிகார்ஜூன கார்கே பேசினார்.

ஸ்ரீநகர்,

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் வருகிற 17-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சசிதரூர் எம்.பி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்று பேசிய மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில்:-

காங்கிரஸ் கட்சியின் உண்மையான போராட்டம் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்க்கு எதிரானது. பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நாட்டின் அரசியல், ஜனநாயக மற்றும் சமூக சூழலை பாதிக்கிறது.

எதிர்க்கட்சிகளில் ஜனநாயகம் குறித்து கேள்வி எழுப்ப பாஜகவுக்கு உரிமை இல்லை. பாஜகவில் தலைவர் பதவிக்கான தேர்தல் எப்படி நடைபெறுகிறது என்பது யாருக்காவது தெரியுமா? அப்படியிருக்கும் போது நாட்டின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய ஜனநாயகக் கட்சியான காங்கிரஸைப் பற்றி கேள்வி எழுப்ப பா.ஜனதா கட்சிக்கு என்ன உரிமை இருக்கிறது?

ஏழு தசாப்தங்களாக காங்கிரஸால் கட்டமைக்கப்பட்ட ஜனநாயக அமைப்புகள் இப்போது பலவீனமடைந்துள்ளன. எதிர்ப்புக் குரல் இப்போது நசுக்கப்படுகிறது. பண்டித ஜவஹர்லால் நேரு முதல் மன்மோகன் சிங் அரசு வரை, காங்கிரஸ் கட்சி உருவாக்கிய சொத்துக்கள் நரேந்திர மோடி தலைமையிலான அரசால் விற்கப்பட்டுள்ளன.

நாட்டில் அரசியலமைப்பு சட்டத்தையும் ஜனநாயக அமைப்புகளையும் பாதுகாப்பதில் காங்கிரஸ் கட்சி முன்னணியில் இருக்கிறது. நாட்டில் அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற காங்கிரஸ் கட்சியினர் முன்னின்று நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story