புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்புவிழா புறக்கணிப்பை மறுபரிசீலனை செய்யுங்கள் - எதிர்க்கட்சிகளுக்கு மத்திய மந்திரி கோரிக்கை
புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்புவிழா புறக்கணிப்பு முடிவை மறுபரிசீலனை செய்யும்படி எதிர்க்கட்சிகளுக்கு மத்திய மந்திரி கோரிக்கை விடுத்த்துள்ளார்.
டெல்லி,
தற்போதைய நாடாளுமன்ற கட்டிடம் 96 ஆண்டுகள் பழமையானது. அதனால், புதிய நாடாளுமன்றம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 10-ந் தேதி, புதிய நாடாளுமன்றம் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
கட்டுமான பணி முடிவடைந்து, புதிய நாடாளுமன்றம் தயாராகி விட்டது. வருகிற 28-ந் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
ஆனால், மக்கள் பணத்தில் கட்டப்பட்டது என்பதாலும், நாட்டின் முதல் குடிமகள் என்பதாலும் ஜனாதிபதி திரவுபதி முர்முதான் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தின. மேலும், புதிய நாடாளுமன்ற கட்டிடம் சாவர்க்கரின் பிறந்தநாளான வரும் 28ம் தேதி திறக்கப்பட உள்ளதால் அதற்கும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இதனிடையே, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதிதான் திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி தான் திறந்துவைப்பார் என மத்திய மந்திரிகள் கூறி வருகின்றனர். இதனால், புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்கப்போவதில்லை என்று திறப்பு விழாவை புறக்கணிப்பதாகவும் காங்கிரஸ், திமுக உள்பட 19 எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன. இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்லது.
புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை 19 எதிர்க்கட்சிகள் கூட்டாக புறக்கணித்துள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேறப்போவதில்லை என்ற முடிவை மறுபரிசீலனை செய்து திறப்பு விழாவில் பங்கேற்கும்படி நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி எதிர்க்கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரச்சினை இல்லாத விவகாரத்தில் பிரச்சினை ஏற்படுத்தி விழாவை புறக்கணிப்பது துரதிர்ஷ்டவசமானது. விழாவில் பங்கேற்கப்போவதில்லை என்ற முடிவை எதிர்க்கட்சிகள் மறுபரிசீலனை செய்து விழாவில் பங்கேற்க வேண்டும் என வெண்டுகோள் விடுக்கிறேன்' என்றார்.