கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்': சபரிமலை பம்பை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு
கேரளாவில் மீண்டும் கனமழை பெய்ததால் 8 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் மீண்டும் கனமழை பெய்ததால் 8 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் மீண்டும் கனமழை பெய்ததால் 8 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. சபரிமலை பம்பை ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் நேற்று பிற்பகலுக்கு பிறகு சன்னிதானம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
கேரளாவில் நேற்று மீண்டும் கனமழை பெய்தது. மேலும் பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, கண்ணூர் ஆகிய 8 மாவட்டங்களில் அதிகன மழை பெய்யும் என வானிலை மையம் 'ரெட் அலர்ட்' விடுத்தது. திருவனந்தபுரம் மாவட்டத்துக்கு மஞ்சள் எச்சரிக்கையும், மற்ற மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
பலத்த மழையால் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பம்பை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ள நிலையில் ஏராளமான பக்தர்கள் சன்னிதானத்தில் குவிந்தனர்.
இந்தநிலையில் பம்பை ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக மாலை 6 மணிக்கு முன்பாக பக்தர்கள் சன்னிதானத்தில் இருந்து கீழே இறங்கும்படி உத்தரவிடப்பட்டது. மேலும் பிற்பகல் 2 மணிக்கு மேல் பக்தர்கள் பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல தடை விதிக்கப்பட்டது.
கேரளாவில் கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு மற்றும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அந்தந்த மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
மோசமான வானிலை காரணமாக கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த 5 விமானங்கள் கொச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன.
அதாவது ஷார்ஜா, அபுதாபி, பஹ்ரைன், தோஹாவில் இருந்து வந்த 5 விமானங்கள் கொச்சிக்கு திருப்பி விடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.