கடலோர பகுதிகளில் உள்ள 25 ஆயிரம் குடிசைகளை மேம்படுத்த மத்திய அரசுக்கு அறிக்கை - மகாராஷ்டிரா முதல்-மந்திரி


கடலோர பகுதிகளில் உள்ள 25 ஆயிரம் குடிசைகளை மேம்படுத்த மத்திய அரசுக்கு அறிக்கை - மகாராஷ்டிரா முதல்-மந்திரி
x
தினத்தந்தி 3 Aug 2023 11:15 PM GMT (Updated: 3 Aug 2023 11:16 PM GMT)

மும்பை கடலோரப்பகுதியில் உள்ள 25 ஆயிரம் குடிசைகளை மேம்படுத்துவது தொடர்பான அறிக்கை 2 மாதத்தில் மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என சட்டசபையில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறினார்.

ஆஷிஸ் செலார் கேள்வி

மும்பையில் கடலோரப்பகுதியில் உள்ள குடிசைப்பகுதிகளை மேம்படுத்துவது தொடர்பாக சட்டசபையில் பா.ஜனதா எம்.எல்.ஏ. ஆஷிஸ் செலார் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதுதொடர்பாக அவர் பேசுகையில், "மும்பையை குடிசைப்பகுதியில்லாத நகராக மாற்ற நாம் முயற்சி செய்து வருகிறோம். ஆனால் மறுபுறம் ஒர்லி, பாந்திரா, வெர்சோவா, ஜூகு, தாராவி உள்ளிட்ட பகுதிகளில் 25 ஆயிரம் குடிசைகளில் வசிக்கும் 1¼ லட்சம் மக்கள் நீண்ட காலமாக அரசிடம் இருந்து நல்ல முடிவுக்காக காத்து உள்ளனர். கடலோரப்பகுதிகளில் உள்ள குடிசைப்பகுதியை மேம்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி, குடிசை மேம்பாட்டு ஆணையத்தின் அறிக்கை எப்போது மத்திய அரசிடம் தாக்கல் செய்யடும்? " என கேள்வி எழுப்பினார்.

2 மாதத்தில் அனுப்பப்படும்

இதற்கு பதில் அளித்து முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பேசியதாவது:-

கடல் ஒழுங்குமுறை மண்டலம்- 2 கீழ் வரும் குடிசைப்பகுதியை மேம்படுத்துவது தொடர்பான அறிக்கையை மும்பை மாநகராட்சி, குடிசை மேம்பாட்டு ஆணையம் தயாரித்து வருகிறது. கடலோரப்பகுதியில் உள்ள குடிசைப்பகுதிகளை மேம்படுத்த அந்த அறிக்கை முக்கியமானதாகும். அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு 2 மாதத்தில் மத்திய அரசுக்கு அனுப்பப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story