வடகர்நாடகத்தில் கனமழை: அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு - ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு


வடகர்நாடகத்தில் கனமழை: அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு - ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு
x

வடகர்நாடகத்தில் பெய்து வரும் கனமழையால் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

பெங்களூரு:

ஆர்ப்பரித்து கொட்டும் நீர்வீழ்ச்சி

கர்நாடகத்தில் மலைநாடு மாவட்டங்கள், கடலோர பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் எடுத்து உள்ளது. இதுபோல மராட்டியத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அந்த மாநிலத்தின் எல்லையில் உள்ள வடகர்நாடக மாவட்டங்களிலும் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. பெலகாவி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கோகாக் தாலுகாவில் பெய்து வரும் கனமழையால் கோகாக் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

அங்கு ஆபத்தை உணராமல் மக்கள் செல்போன்களில் செல்பி எடுத்து வருகின்றனர். கனமழை காரணமாக அந்த மாவட்டத்தில் ஓடும் கட்டபிரபா, மல்லபிரபா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. கோகாக்கில் இருந்து சிண்டலபுரா என்ற கிராமத்திற்கு செல்லும் சாலையில் கட்டபிரபா ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டு உள்ளது. அந்த பாலத்தை மூழ்கடித்தப்படி தண்ணீர் செல்கிறது. அங்கு வரும் வாகன ஓட்டிகள் வாகனத்தை நிறுத்தி கழுவி வருகிறார்கள். மேலும் சிலர் துணி துவைத்தும் வருகிறார்கள்.

வீடுகள் இடிந்தன

ஹாவேரி மாவட்டம் ராட்டிஹள்ளி தாலுகா இரேகொப்பா, சிக்ககொப்பா, கூட்டதமாலபுரா ஆகிய கிராமங்களில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய மழை பெய்தது. இதனால் மேற்கண்ட 3 கிராமங்களிலும் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் இடிந்து உள்ளன. ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசுகுர் தாலுகா கரக்கலஹட்டி கிராமத்தில் ஓடும் கிருஷ்ணா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இதனால் ஆற்றின் எதிர்கரையில் வசித்து வரும் நடுகுந்தி என்ற கிராமத்தை சேர்ந்த மக்கள் ஆற்றை கடக்க முடியாமல் கிராமத்தில் முடங்கி உள்ளனர். கொப்பல் மாவட்டம் முனிரபாத் பகுதியில் ஓடும் துங்கபத்ரா ஆற்றில் வெள்ளபபெருக்கு ஏற்பட்டு உள்ளது. ஆனால் அந்த ஆற்றில் ஆபத்தை உணராமல் 2 வாலிபர்கள் குளித்தனர். இந்த காட்சி வைரலாகி உள்ளது.

கிருஷ்ணா ஆற்றில் வெள்ளப்பெருக்கு

பீதர் மாவட்டம் அவுராத் தாலுகா சம்பள்ளி கிராமத்தில் பெய்த கனமழையால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து உள்ளது. யாதகிரி மாவட்டம் வடகேரா தாலுகாவில் உள்ள குருசனகி தடுப்பணை நிரம்பியதால் அங்கு இருந்து நேற்று வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. மராட்டியத்தில் பெய்து வரும் கனமழையால் கொய்னா அணையில் இருந்து திறந்து விடப்பட்டு உள்ளது.

இதனால் விஜயநகர் மாவட்டம் ஒசப்பேட்டேயில் உள்ள துங்கபத்ரா அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அந்த அணையில் இருந்து நேற்று 10 மதகுகள் வழியாக 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதுபோல யாதகிரி மாவட்டம் நாராயணபுராவில் உள்ள பசவசாகர் அணையில் இருந்து நேற்று வினாடிக்கு 1 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த 2 அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரால் கிருஷ்ணா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது.


Next Story