ரிலையன்ஸ் நிறுவனத்தின் சில்லறை விற்பனை - எப்எம்சிஜி வணிகம் இந்த ஆண்டு தொடங்கப்படும்! இஷா அம்பானி அறிவிப்பு
ரிலையன்ஸ் நிறுவனம் இந்த ஆண்டு எப்எம்சிஜி (வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள்) வணிகத்தை தொடங்க உள்ளது.
மும்பை,
ரிலையன்ஸ் நிறுவனம் இந்த ஆண்டு எப்எம்சிஜி (வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள்) வணிகத்தை தொடங்க உள்ளது என்று இஷா அம்பானி தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 45வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் முகேஷ் அம்பானியின் மகளான இஷா அம்பானி பேசினார். 5ஜி சேவைகள் தொடர்பான அறிவிப்புக்குப் பிறகு, இஷா அம்பானி ரிலையன்ஸ் ரீடெய்ல் குறித்த தகவல்களை பங்குதாரர்கள் முன் பகிர்ந்து கொண்டார்.
அதன்படி, பால், பேக்கேஜ் செய்த உணவுகள், கழிப்பறை பொருட்கள், பானங்கள், எழுதுபொருட்கள், கடையில் கிடைக்கும் மருந்துகள், துப்புரவு மற்றும் சலவை பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள், தனிப்பட்ட பராமரிப்பு பொருட்கள், அத்துடன் மொபைல் போன்கள் மற்றும் ஹெட்போன்கள் போன்ற குறைந்த விலை நுகர்வோர் மின்னணு பொருட்கள் உள்ளிட்ட 'எப்எம்சிஜி (வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள்)' வணிகத்தை ரிலையன்ஸ் நிறுவனம் தொடங்க உள்ளது.
இஷா தற்போது ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் இயக்குநராக பணியாற்றி வருகிறார். அவர் கூறியதாவது:-
உயர்தர, மலிவு விலையில் பொருட்களை உருவாக்கி வழங்குவதற்கான நோக்கத்துடன் ரிலையன்ஸ் நிறுவனம் இந்த ஆண்டு எப்எம்சிஜி (வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள்) வணிகத்தை தொடங்க உள்ளது.
கடந்த ஓராண்டில் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் 2500 புதிய கடைகளை திறந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள ரிலையன்ஸ் ரீடெய்ல் கடைகளின் எண்ணிக்கை தற்போது 15,000ஐ தாண்டியுள்ளது.
இது ஒவ்வொரு இந்தியரின் அன்றாட தேவைகளையும் தீர்க்கும் உயர்தர, மலிவு விலையில் பொருட்களை உருவாக்கி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தில் மட்டும் 1.50 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை 3.60 லட்சத்தை எட்டியுள்ளது.
ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவன கடைகள் மற்றும் டிஜிட்டல் தளங்களில் 200 மில்லியனுக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். நிறுவனத்தின் டிஜிட்டல் தளங்களின் வளர்ச்சி கடந்த ஆண்டை விட 2.5 மடங்கு அதிகரித்துள்ளது. ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட ஆறு லட்சம் ஆர்டர்கள் டெலிவரி செய்யப்படுகின்றன.
ரிலையன்ஸ் ரீடெய்லின் சொந்த பிராண்டுகள் ஒட்டுமொத்த வருவாயில் 65 சதவீதத்திற்கும் மேல் பங்களிக்கின்றன. புதிய வர்த்தக முயற்சி மூலம், 1 கோடி வணிகர்களுடன் கூட்டு சேர திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் வர்த்தகத்தை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நிறுவனம் ஒவ்வொரு மாதமும் 1.50 லட்சம் வணிக கூட்டாளர்களை சேர்த்து வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் நிறுவனம் 10 மில்லியன் வணிக கூட்டாளர்களின் எண்ணிக்கையை எட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி கூறுகையில், இஷாவின் தலைமையின் கீழ், ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் ரூ.2 கோடி அளவுக்கு வர்த்தகம் செய்துள்ளது. இதனால் ஆசியாவின் முதல் 10 சில்லறை விற்பனையாளர்களில் ஒன்றாக ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் மாறியுள்ளது.
இதன்மூலம், ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பு விரைவில் இஷாவுக்கு வழங்கப்படும் எனத் தெரிகிறது.