வனத்துறையினரை கண்டித்து பங்காருபேட்டையில், விவசாயிகள் இருசக்கர வாகன பேரணி
வனத்துறையினரை கண்டித்து பங்காருபேட்டையில், விவசாயிகள் இருசக்கர வாகன பேரணி நடத்தினர்.
கோலார் தங்கவயல்;
கோலார் மாவட்டம் பங்காருபேட்டை தாலுகாவில் வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் உள்ள விளைநிலத்திற்குள் காட்டுயானைகள் இரைதேடி புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வரும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. காட்டு யானைகளின் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி பலமுறை விவசாயிகள் வனத்துறை அதிகரிகளிடமும், நாராயணசாமி எம்.எல்.ஏ.விடமும் கோரிக்கை வைத்தனர். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தி அடைந்த விவசாயிகள், வனத்துறை அதிகாரிகளை கண்டித்து 17-ந்தேதி இருசக்கர வாகன பேரணி நடத்தப்படும் என்று அறிவித்தனர். அதன்படி நேற்றுமுன்தினம் விவசாய சங்க மாநில துணைத்தலைவர் நாராயணகவுடா தலைமையில் பங்காருபேட்டையில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்துகொண்ட இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் கலந்து கொண்ட விவசாயிகள், வனத்துறை அதிகாரிகளுக்கும், நாராயணசாமி எம்.எல்.ஏ.வுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினார்கள்.