துருக்கி நிலநடுக்க மீட்பு பணியின்போது சிறுமியின் உயிரை காத்த மோப்ப நாய் ஜூலிக்கு விருது


துருக்கி நிலநடுக்க மீட்பு பணியின்போது சிறுமியின் உயிரை காத்த மோப்ப நாய் ஜூலிக்கு விருது
x

துருக்கி நிலநடுக்க மீட்பு பணியின்போது 6 வயது சிறுமியின் உயிரை காத்த மோப்ப நாய் ஜூலிக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

துருக்கி-சிரிய எல்லையில் கடந்த பிப்ரவரி மாதம் 6-ந்தேதி ரிக்டர் அளவில் 7.8 புள்ளிகளாக ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் அந்த இரு நாடுகளையும் நிலைகுலைய செய்தது. இயற்கையின் இந்த கோர தாண்டவத்தில் ஆயிரக்கணக்கானோர் பலியாகினர்.

பேரிடரில் சிக்கி தவித்த துருக்கிக்கு உதவும் வகையில் இந்தியா தனது தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் மருத்துவ குழுவை துருக்கிக்கு அனுப்பியது. ஆபரேஷன் தோஸ்த் என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட இந்த மீட்பு பணியின்போது இடிபாடுகளில் சிக்கியவர்களை கண்டறிய இந்திய தேசிய பேரிடர் மீட்பு குழுவின் ஜூலி என்ற மோப்ப நாய் பெரிதும் உதவியது.

குறிப்பாக 7 மாடி கட்டிடத்தின் இடிபாடுகளில் சுமார் 70 மணி நேரத்துக்கும் மேலாக சிக்கியிருந்த 6 வயது சிறுமி, மோப்ப நாய் ஜூலியின் உதவியால் உயிருடன் மீட்கப்பட்டது பெரிதும் கவனம் ஈர்த்தது.

இந்த நிலையில் துருக்கி நிலநடுக்க மீட்பு பணிகளில், இடிபாடுகளில் சிக்கியிருந்த சிறுமியின் உயிரை காப்பாற்ற காரணமாக இருந்த மோப்ப நாய் ஜூலிக்கு சிறப்பு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

சிறந்த தேடல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டதற்காக மோப்ப நாய் ஜூலிக்கு 'டைரக்டர் ஜெனரல் விருது' வழங்கப்பட்டதாக தேசிய பேரிடர் மீட்பு குழுவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story