மழை பாதிப்பு பகுதிகளில் மீட்பு பணியில் ஈடுபட வேண்டும்; அதிகாரிகளுக்கு கலெக்டர் ரமேஷ் உத்தரவு


மழை பாதிப்பு பகுதிகளில் மீட்பு பணியில் ஈடுபட வேண்டும்;  அதிகாரிகளுக்கு கலெக்டர் ரமேஷ் உத்தரவு
x

சிக்கமகளூரு மாவட்டத்தில் மழை பாதிப்பு பகுதிகளில் அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று கலெக்டர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.

சிக்கமகளூரு;

தொடர் கனமழை

மலைநாடு மாவட்டமான சிக்கமகளூருவில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த தொடர் கனமழை காரணமாக மாவட்டத்தில் பல இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. மேலும் துங்கா, பத்ரா, ஹேமாவதி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.மேலும் மாவட்டத்தில் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு நிலச்சரிவை சரி செய்யும் பணிகளும் நடந்து வருகிறது.


மீட்பு பணியில் ஈடுபட வேண்டும்

இந்த நிலையில் சிக்கமகளூரு கலெக்டர் ரமேஷ் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

சிக்கமகளூரு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் பல பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீயணைப்பு படையினர், ஆப்தமித்ரா குழுவினர் உதவி வருகிறார்கள்.

மேலும் வீடுகளை இழந்த மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தாசில்தார்கள், கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு மீட்பு பணியில் ஈடுபட வேண்டும். விடுப்பில் உள்ள அரசு அதிகாரிகளும் உடனடியாக பணிக்கு வர வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரிகள் உதவியாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story