என்னை யார் அதிகமாக விமர்சிப்பது காங்கிரசில் கடும் போட்டி - பிரதமர் மோடி பேச்சு
என்னைப்பற்றி தவறாக பேசுவதில் காங்கிரஸ் கட்சியினருக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது என பிரதமர் மோடி கூறினார்.
ஆமதாபாத்,
குஜராத்தில், 182 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு டிசம்பர் 1, 5 தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. குஜராத்தில் இன்று 89 தொகுதிகளுக்கு முதல்கட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அகமதாபாத்தில் பிரதமர் மோடி இன்று மாலை பேரணியாக செல்கிறார். மாலை தொடங்கும் இந்த பயணம் இரவு 9.45 மணியளவில் நிறைவு பெறுகிறது. இதில் 50 கி.மீ தொலைவு வரை பிரதமர் சாலை மார்கமாகவே பயணிக்கிறார்.
குஜராத் தேர்தல் 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில், பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
காந்திநகர் மாவட்டம் கலோலில் தீவிர பிரசாரத்தில் ஈடுப்பட்டுள்ளார். அப்போது பேசிய அவர்,
ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்திருந்தால் இந்த நிலைக்கு சென்றிருக்க மாட்டார்கள். அவர்கள் ஒரு குடும்பத்தை நம்புகிறார்கள். ஜனநாயகத்தை அல்ல. ஒரு குடும்பம், அந்தக் குடும்பமே அவர்களுக்கு எல்லாமே தவிர, ஜனநாயகம் அல்ல.
மோடியை குறித்து யார் அதிகமாக விமர்சிப்பது என்று காங்கிரஸ் கட்சியில் தினமும் போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் தலைவராக இருக்கும் மல்லிகார்ஜூன கார்கேவை மதிக்கிறேன். இது ராம பக்தர்களின் குஜராத் என்பது காங்கிரஸ் கட்சிக்கு தெரியாது.
"ராமபக்தர்களின்" இந்த நிலத்தில், "மோடி 100 தலை கொண்ட ராவணன்" என்று மல்லிகார்ஜூன கார்கே என்னை விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியினர் எவ்வளவு சேற்றை வீசுகிறார்களோ அவ்வளவு தாமரை அதிகமாக பூக்கும். தொழில் தொடங்குவதற்கு உகந்த மாநிலங்களின் தரவரிசையில் குஜராத் முதலிடம் பிடித்துள்ளது.
இதற்கு வரும் 5ம் தேதி நடைபெற இருக்கும் 2ம் கட்ட தேர்தலில் மக்கள் தாமரைக்கு வாக்களித்து அவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று கூறினார்.