பள்ளிகள் முன்கூட்டியே திறப்பு, கோடை மழை எதிரொலி; கர்நாடக சுற்றுலாத்துறைக்கு வருமானம் பாதிப்பு
பள்ளிகள் முன்கூட்டியே திறப்பு, கோடை மழை எதிரொலியால் கர்நாடக சுற்றுலாத்துறைக்கு வருமானம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு: கர்நாடகத்தில் கோடை காலத்தின் உச்சமான மே மாதத்தில் இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கர்நாடகத்திற்கு சுற்றுலா வருவார்கள். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக சுற்றுலாத்துறை முடங்கி இருந்தது.
நடப்பு ஆண்டில் கொரோனா பரவல் குறைந்துவிட்ட காரணத்தால் கடந்த ஏப்ரல் மாதத்தில் சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் சுற்றுலா தலங்களுக்கு வரத்தொடங்கினர். இதனால் வியாபாரிகள், விடுதி உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மே மாதம் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் என்று அவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் மே மாதம் தொடங்கியதில் இருந்தே கோடை மழை தினமும் வெளுத்து வாங்கி வருகிறது. மேலும் பள்ளிகள் முன்கூட்டியே திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக குடகு, தாண்டேலி மற்றும் மைசூரு உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. அதனால் கர்நாடக சுற்றுலாத்துறையின் வருமானம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் கர்நாடகம் 3-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.