கேரளாவில் பரபரப்பு: ஆன்லைன் விளையாட்டால் திருடனாக மாறிய போலீஸ்காரர் கைது நண்பனின் வீட்டில் கைவரிசை காட்டியபோது சிக்கினார்


கேரளாவில் பரபரப்பு: ஆன்லைன் விளையாட்டால் திருடனாக மாறிய போலீஸ்காரர் கைது  நண்பனின் வீட்டில் கைவரிசை காட்டியபோது சிக்கினார்
x
தினத்தந்தி 26 Oct 2022 5:15 AM IST (Updated: 26 Oct 2022 5:15 AM IST)
t-max-icont-min-icon

ஆன்லைன் விளையாட்டால் ஏற்பட்ட கடனை அடைக்க நண்பர் வீட்டில் திருடிய போலீஸ்காரர் கைது செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளா மாநிலம், ஆலப்புழாவைச் சேர்ந்தவர் அமல்தேவ் கே.சதீசன் (வயது 35). இவர் எர்ணாகுளம் ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.

இதற்காக அவர் எர்ணாகுளம் வைபின் ஞாறக்கல் பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் நடேசன். இவரும், அமல்தேவும் நண்பர்கள் ஆவர். இந்த நிலையில், கடந்த 16-ந்தேதி நடேசனின் வீட்டில் இருந்து 10 பவுன் நகை திருட்டு போனது. இதையடுத்து ஞாறக்கல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால், துப்பு எதுவும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், தனது வீட்டிற்கு கணவரின் நண்பரான அமல்தேவ் அடிக்கடி வந்து சென்றதால் அவர் மீது சந்தேகம் இருப்பதாக நடேசனின் மனைவி போலீசில் கூறினார். இதையடுத்து அமல்தேவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, நண்பர் வீ்ட்டில் திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர் கூறியதை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அதன் விவரம் வருமாறு:-

போலீஸ்காரராக பணியாற்றி வந்த அமல்தேவுக்கு ஆன்லைனில் ரம்மி விளையாடும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த விளையாட்டுக்கு அடைமையான அமல்தேவ் இதில் ரூ.30 லட்சத்தை இழந்து கடனாளியானார். மேலும், தனக்கு கிடைக்கும் பணம் முழுவதையும் இந்த விளையாட்டிலேயே இழந்துள்ளார். ஒரு கட்டத்தில் கடன் கொடுத்தவர்கள் அவரை நெருக்கத் தொடங்கினர்.

இந்தநிலையில் கடனை அடைக்க தனது நண்பர் வீட்டில் திருட திட்டமிட்டார். அதன்படி சம்பவத்தன்று வழக்கம்போல் நண்பர் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு யாரும் அவரை கவனிக்காத நேரத்தில் நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. திருடிய நகைகளில் சிலவற்றை அப்பகுதியில் அடகு வைத்ததும், மீதி இருந்த நகைகளை விற்றதும் தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து நகைகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆன்லைன் விளையாட்டால் ஏற்பட்ட கடனை அடைக்க போலீஸ்காரர் அமல்தேவ் தனது நண்பர் வீட்டில் திருடிய சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story