இங்கிலாந்தின் பிரதமராக இந்திய வம்சாவளி ரிஷி சுனக் தேர்வானது பெருமை அளிக்கிறது; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி


இங்கிலாந்தின் பிரதமராக இந்திய வம்சாவளி ரிஷி சுனக் தேர்வானது பெருமை அளிக்கிறது; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
x
தினத்தந்தி 25 Oct 2022 6:45 PM GMT (Updated: 25 Oct 2022 6:45 PM GMT)

இங்கிலாந்து பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் தேர்வாகி இருப்பது நமக்கு பெருமை அளிப்பதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

தலைவர்கள் வாழ்த்து

இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் தேர்வாகி உள்ளார். இன்னும் சில நாட்களில் அவர் இங்கிலாந்து நாட்டு பிரதமராக பதவி ஏற்க உள்ளார். இங்கிலாந்து நாட்டு பிரதமர் ரிஷி சுனக், கர்நாடகத்தின் மருமகன் என்று அழைக்கப்படுகிறார். பெங்களூருவில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனராக நாராயணமூர்த்தி-சுதா தம்பதியின் மகளான அக்‌ஷதாவை திருமணம் செய்துள்ளார். இதன் காரணமாகவே ரிஷி சுனக் கர்நாடகத்தின் மருமகன் என்று அழைக்கப்படுகிறார்.

இந்த நிலையில், இங்கிலாந்து நாட்டின் பிரதமராகி உள்ள ரிஷி சுனக்கிற்கு, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

பெருமை அளிக்கிறது

இங்கிலாந்து பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கிக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இது நாம் அனைவருக்கும் கிடைத்திருக்கும் பெருமை மற்றும் சந்தோஷமான விஷயமாகும். ஆங்கிலேயர்கள், இந்தியாவில் 200 ஆண்டுக்கும் மேலாக ஆட்சி, நிர்வாகம் நடத்தினார்கள். தற்போது இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக், இங்கிலாந்து நாட்டுக்கே பிரதமர் ஆகி இருக்கிறார்.

அவர், இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பது பெருமை அளிக்கிறது. இதன் மூலம் கால சக்கரம் வேகமாக சுழல்வது தெரியவந்துள்ளது. ரிஷி சுனக் கூட இங்கிலாந்து பிரதமராக கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு இருந்தார். உலகில் பல நாடுகளில் அனைத்து துறைகளிலும் இந்தியர்கள் சாதித்து வருகிறார்கள். பல நாடுகளில் நமது இந்திய நாட்டை பூர்வீகமாக கொண்டவர்கள், அரசின் உயர் பதவிகளிலும், அரசியலிலும் உயர்ந்த பதவிகளில் இருந்து வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

வரலாற்று சிறப்பு மிக்க தருணம்

இதுகுறித்து குமாரசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயணமூர்த்தி-சுதா தம்பதியின் மருமகனான ரிஷி சுனக் இங்கிலாந்து நாட்டின் பிரதமராகி இருப்பதற்கு எனது இதய பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இங்கிலாந்து நாட்டை ரிஷி சுனக் முன்னோக்கி எடுத்து செல்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று கூறியுள்ளார்.

இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் பதவி ஏற்க இருப்பது, வரலாற்று சிறப்பு மிக்க தருணமாகும் என்று இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் நிதி அதிகாரி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


Next Story