ஆண்டர்சன்பேட்டையில் மந்தகதியில் நடக்கும் சாலை விரிவாக்க பணி


ஆண்டர்சன்பேட்டையில் மந்தகதியில் நடக்கும் சாலை விரிவாக்க பணி
x
தினத்தந்தி 31 Aug 2023 6:45 PM GMT (Updated: 31 Aug 2023 6:45 PM GMT)

ஆண்டர்சன்பேட்டையில் மந்தகதியில் நடக்கும் சாலை விரிவாக்க பணி வாகன ஓட்டிகள் கடுமையாக அவதியடைந்துள்ளனா்.

கோலார் தங்கவயல்

கோலார் மாவட்டம் கோலார் தங்கவயலில் சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. அதாவது, ஆண்டர்சன்பேட்டை, ராபர்ட்சன்பேட்டை பகுதியில் வாகன ஓட்டிகளின் வசதிக்காக சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

சட்டசபை தேர்தலுக்கு முன்பு வரை சாலை விரிவாக்க பணிகள் வேகமாக நடந்து வந்தது. இந்த நிலையில் தற்போது சட்டசபை தேர்தல் முடிந்த நிலையில், சாலை விரிவாக்க பணிகள் மந்தகதியில் நடந்து வருகிறது.

குறிப்பாக ஆண்டர்சன்பேட்டையில் இருந்து ரோட்ஜஸ்கேம்ப் வரையிலான சாலைகள் விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்டுள்ளது. மேலும் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு உள்ளது. இதனால், அந்த சாலையில் ஜல்லி கற்களாக காட்சி அளிக்கிறது.

பல நாட்கள் ஆகியும் சாலை விரிவாக்க பணிகள் முடிவடையாமல் மந்தகதியில் நடந்து வருகிறது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

ஆண்டர்சன்பேட்டை வழியாக ஆந்திரா செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை அனுபவித்து வருகிறார்கள். இதனால் சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் ரூபாகலா சசிதர் எம்.எல்.ஏ.வுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

மேலும் அந்த சாலையில் சாக்கடை கால்வாயும் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதன்காரணமாக அந்தப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.


Next Story