மங்களூரு விமான நிலையத்தில் ரூ.1¼ கோடி கடத்தல் தங்கம் சிக்கியது; பெண் உள்பட 2 பேர் கைது


மங்களூரு விமான நிலையத்தில் ரூ.1¼ கோடி கடத்தல் தங்கம் சிக்கியது; பெண் உள்பட 2 பேர் கைது
x

மங்களூரு விமான நிலையத்தில் ரூ.1¼ கோடி கடத்தல் தங்கம் சிக்கியது. இதுதொடர்பாக பெண் உள்பட 2 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

மங்களூரு;

போதைப்பொருட்கள் கடத்தல்

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே பஜ்பே பகுதியில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், டெல்லி, மும்பை, சென்னை போன்ற பகுதிகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றது.

அதேபோல் பிற பகுதிகளில் இருந்தும் மங்களூருவுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த விமானங்கள் மூலம் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் சிலர் தங்கம், போதைப்பொருட்களை கடத்தி வருவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இது தொடர்பாக விமான நிலைய அதிகாரிகள் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் துபாயில் இருந்து மங்களூரு வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது துபாயில் இருந்து வந்த பெண் பயணி ஒருவர் மீது சந்தேகம் எழுந்தது.

ரூ.49 லட்சம் தங்கம்

அந்த பெண்ணை தனி அறைக்கு அழைத்து சென்ற சுங்கத்துறை அதிகாரிகள் ஆடைகள் மற்றும் உடமைகளை சோதனை செய்தனர். அப்போது அவரது பையில் 1.68 கிலோ எடை கொண்ட தங்க கட்டி இருந்தது தெரியவந்தது.

இதேபோல் மற்றொரு பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவரிடம் ரூ.49 லட்சம் மதிப்பிலான தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து விமானத்தில் தங்கம் கடத்தி வந்த பெண் உள்பட 2 பேரையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1¼ கோடி மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பின்னர் கைதான 2 பேரையும் பஜ்பே போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த பஜ்பே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story