தொழில் அதிபரிடம் ரூ.1.24 கோடி மோசடி


தொழில் அதிபரிடம் ரூ.1.24 கோடி மோசடி
x
தினத்தந்தி 21 March 2023 11:00 AM IST (Updated: 21 March 2023 11:00 AM IST)
t-max-icont-min-icon

கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி தொழில் அதிபரிடம் ரூ.1.24 கோடி மோசடி நடந்துள்ளது. இதுதொடர்பாக கேரள வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மங்களூரு-

கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி தொழில் அதிபரிடம் ரூ.1.24 கோடி மோசடி நடந்துள்ளது. இதுதொடர்பாக கேரள வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கிரிப்டோகரன்சி முதலீடு

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவை சேர்ந்த தொழில் அதிபர் கடந்த 2021-ம் ஆண்டு கேரளாவை சேர்ந்த ஜிஜோ ஜான் என்பவர் வாட்ஸ் அப் செயலில் மூலம் அறிமுகமாகினார். அப்போது ஜிஜோ ஜான், நான் பிரபல பங்குச் சந்தையில் பணியாற்றி வருகிறேன் என்று அவரிடம் கூறினார். மேலும் கிரிப்டோகரன்சியில் வாடிக்கையாளர்களை முதலீடு செய்யும்படி கூறி வருகிறேன். இதில் முதலீடு செய்தால், கூடுதல் லாபம் கிடைக்கும் என்றும் தொழில் அதிபரிடம் கூறினார். மேலும், அத்துடன் வங்கி கணக்கு விவரங்களையும் அனுப்பி வைத்திருந்தார்.

இதற்கிடையில் கொரோனா காலம் என்பதால் 2 பேரும் நேரில் சந்திக்க முடியவில்லை. செல்போனில்தான் பேசி கொண்டனர். இந்நிலையில் ஜிஜோஜான் பேசியதை நம்பிய தொழில் அதிபர் கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை ஜிஜோ ஜான் கூறிய வங்கி கணக்கிற்கு பணத்தை செலுத்தினார். முதல் முறை பணம் செலுத்தியபோது, கிரிப்டோகரன்சி மூலமாக 10 சதவீதம் லாபம் கிடைத்தது.

ரூ.1.24 கோடி மோசடி

இதையடுத்து அவர் மீண்டும் மீண்டும் கிரிப்டோகரன்சியில் பணத்தை முதலீடு செய்தார். மொத்தம் ரூ.1.24 கோடி வரை முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த பணத்திற்காக லாபம் கிடைக்கவில்லை. மேலும் ரொக்கப்பணமும் கிடைக்கவில்லை. கிரிப்டோகரன்சி கணக்கை சரி பார்த்தார். அதில் எந்த பணமும் கிரிப்டோகரன்சியாக மாறவில்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து சந்தேகம் அடைந்த தொழில் அதிபர், உடனே ஜிஜோ ஜானை தொடர்பு கொண்டு, பேச முயற்சித்தார். அப்போது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து ஏமாற்றம் அடைந்ததை அறிந்த தொழில் அதிபர் உடனே மங்களூரு சைபர் கிரைம் போலீசில் இது குறித்து புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மோசடியில் ஈடுபட்ட ஜிஜோ ஜானை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story