சிக்பள்ளாப்பூரில் ரூ.2 கோடி பணம், பரிசு பொருட்கள் பறிமுதல்


சிக்பள்ளாப்பூரில் ரூ.2 கோடி பணம், பரிசு பொருட்கள் பறிமுதல்
x

சிக்பள்ளாபூரில் கடந்த ஒரு வாரங்களில் ரூ.2 கோடி மதிப்பிலான பணம், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட கலெக்டர் நாகராஜ் தெரிவித்துள்ளார்.

கோலார் தங்கவயல்:-

தேர்தல் நடத்தை விதி

கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற மே மாதம் 10-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இதனால் மாநில முழுவதும் தேர்தல் பறக்கும் படை மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சிக்பள்ளாப்பூரில் நடந்த சோதனையில் கடந்த ஒரு வாரத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட கலெக்டர் நாகராஜ் கூறியதாவது:-

சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 5 சட்டசபை தொகுதிகள் உள்ளது. சிக்பள்ளாப்பூர், குடிபண்டே, சிந்தாமணி, சிட்லகட்டா தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகள் அனைத்து ஆந்திர மாநில எல்லையையொட்டி உள்ளது. இந்த மாநிலத்தில் இருந்து கர்நாடகத்திற்கு பணம், பரிசு பொருட்கள் கொண்டுவரப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மாவட்ட எல்லையில் சோதனை சாவடி அமைத்துள்ளனர். மேலும் வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர்.

ரூ.2 கோடி பொருட்கள் பறிமுதல்

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்தில் நடந்த சோதனையில் ரூ.2 கோடி மதிப்பிலான பணம், பரிசு பொருட்கள், பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 19 பேர் மீது தேர்தல் நடத்தை விதி மீறல் பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 17 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. பாரபட்சமின்றி சோதனை நடத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். தேர்தல் பணியில் யாரும் அலட்சியமாக இருக்க கூடாது. அலட்சியமாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story