நகைக்கடையில் ரூ.3 லட்சம் தங்கம், பணம் திருட்டு


நகைக்கடையில் ரூ.3 லட்சம் தங்கம், பணம் திருட்டு
x
தினத்தந்தி 9 Dec 2022 6:45 PM GMT (Updated: 9 Dec 2022 6:47 PM GMT)

நகைக்கடையில் ரூ.3 லட்சம் தங்கம், பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர்.

கோரமங்களா:

பெங்களூரு கோரமங்களா 1-வது கிராஸ், 1-வது மெயின் ரோட்டில் ஒரு நகைக்கடை உள்ளது. இங்கு நகைகள் அடகு வைத்து மக்கள் கடன் பெற்று செல்வதும் வழக்கம். கடையில் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு உரிமையாளர் மற்றும் ஊழியர் சென்றிருந்தனர். இந்த நிலையில், நள்ளிரவில் கடையின் கழிவறை சுவரை துளையிட்டு, அதன்மூலமாக கடைக்குள் மர்மநபர்கள் புகுந்தனர். பின்னர் கடையில் இருந்த நகைகள், வியாபாரம் மூலம் கிடைத்த பணத்தை மர்மநபர்கள் திருடி சென்று விட்டார்கள். கடையை திறந்து உரிமையாளர் உள்ளே சென்றபோது தான் கழிவறை சுவரில் துளையிட்டு இருப்பதும், நகைகள், பணம் திருட்டுப்போய் இருப்பதும் தெரிந்தது.

இதுபற்றி அறிந்ததும் ஆடுகோடி போலீசார் விரைந்து சென்று கடையை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். அப்போது கடையில் இருந்த ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.2 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. அதே நேரத்தில் லாக்கரை உடைக்க முடியாததால் பல லட்சம் ரூபாய் நகைகள் மர்மநபர்களுக்கு சிக்காமல் தப்பி இருந்தது. இதுகுறித்து ஆடுகோடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.


Next Story