ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு காரில் கடத்திய ரூ.39 லட்சம் கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது


ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு காரில் கடத்திய ரூ.39 லட்சம் கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது
x
தினத்தந்தி 18 Nov 2022 6:45 PM GMT (Updated: 18 Nov 2022 6:45 PM GMT)

ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு காரில் கடத்திய ரூ.39 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மங்களூரு:

போலீசார் வாகன சோதனை

மங்களூரு நகர் கோனஜே போலீஸ் எல்லைக்குட்பட்ட முடிப்பு காயக்கோடி பகுதியில் குற்றப்பிரிவு போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த கேரள மாநில பதிவெண் கொண்ட காரை தடுத்து நிறுத்தினர். பின்னா் போலீசார் காரில் இருந்த 2 பேரிடம் விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார், காரில் சோதனை செய்தனர்.

அப்போது காரில் பண்டல், பண்டலாக கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. இதுதொடர்பாக காரில் இருந்த 2 பேரை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள்.

ரூ.39 லட்சம் கஞ்சா பறிமுதல்

விசாரணையில், அவர்கள் பண்ட்வாலை சேர்ந்த ரமீஷ், மஞ்சேஸ்வரை சேர்ந்த அப்துல் காதர் என்பது தெரியவந்தது. ேமலும் அவர்கள் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கேரளாவுக்கு காரில் கஞ்சா கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.39 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும் 2 செல்போன்கள், ரூ.2,800 ரொக்கம், ஒரு கார் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கோனஜே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். கைதானவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை நேற்று மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் பார்வையிட்டார்.

போலீஸ் கமிஷனர்

இதையடுத்து போலீஸ் கமிஷனர் சசிகுமார், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்தி வந்ததாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் கஞ்சாவை கேரளா மற்றும் மணிப்பால், தட்சிண கன்னடா, உத்தரகன்னடா பகுதியில் விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தனர். கைதானவர்களில் ரமீஷ் என்பவர் மீது கோனஜே, உல்லால், மங்களூரு வடக்கு போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி, தாக்குதல், போதைப்பொருள் கடத்தல் என 6 வழக்குகளும், அப்துல் காதர் மீது உல்லால், காசர்கோடு, மஞ்சேஸ்வா் ஆகிய போலீஸ் நிலையங்களில் போதைப்பொருள் கடத்தல், கொலை முயற்சி என 4 வழக்குகளும் உள்ளன.

கைதானவர்களுக்கு மிகப்பெரிய கும்பலுடன் தொடர்பு இருப்பதும், மேலும் பலருக்கு இதில் தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story