காரில் கடத்திய ரூ.6 லட்சம் போதைப்பொருட்கள் பறிமுதல் பெண் உள்பட 4 பேர் கைது


காரில் கடத்திய ரூ.6 லட்சம் போதைப்பொருட்கள் பறிமுதல்  பெண் உள்பட 4 பேர் கைது
x

பெங்களூருவில் இருந்து மங்களூருவுக்கு காரில் கடத்திய ரூ.6 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக பெங்களூரு பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மங்களூரு;

வாகன சோதனை

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் மாலை படீல் பகுதியில் வாகன சோதனை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது பெங்களூருவில் இருந்து மங்களூரு நோக்கி சந்தேகப்படும்படியாக கார் ஒன்று வந்தது.

அந்த காரை, போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது காருக்குள் எம்.டி.எம். எனப்படும் போதைப்பொருட்கள் இருந்து கண்டுப்பிடிக்கப்பட்டது.

பெண் உள்பட 4 பேர் கைது

இதுதொடர்பாக காருக்குள் இருந்த பெண் உள்பட 4 பேரிடமும், போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் பெங்களூரு மடிவாளாவை சேர்ந்த பெண் சபீதா(வயது 25) மற்றும் கேரள மாநிலம் காசர்கோடுவை சேர்ந்த டிரைவர் முகமது ரமீஷ்(24), ரஷித்(24), அப்துல் ரகூப்(35) ஆகியோர் என்பதும், இவர்கள் 4 பேரும் பெங்களூரு மடிவாளாவில் போதைப்பொருட்களை வாங்கி மங்களூருவுக்கு கடத்தி வந்து விற்க முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.இதில் முகமது ரமீஷ், அப்துல் ரகூப் ஆகியோர் மீது மங்களூரு, கோனஜே போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.

ரூ.9¾ லட்சம் மதிப்பு

அவர்களிடமிருந்து ரூ.6 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்கள் மற்றும் கார், 6 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ.9.82 லட்சம் ஆகும்.

கைதான 4 பேரையும் மங்களூரு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி பின்னர் 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story