பட்டாவில் பெயர் மாற்ற ரூ.10 ஆயிரம்லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி கைது


பட்டாவில் பெயர் மாற்ற ரூ.10 ஆயிரம்லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி கைது
x
தினத்தந்தி 3 March 2023 12:15 PM IST (Updated: 3 March 2023 12:15 PM IST)
t-max-icont-min-icon

சித்ரதுர்கா அருகே பட்டாவில் பெயர் மாற்ற ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி லோக் அயுக்தா போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

சிக்கமகளூரு-

பட்டாவில் பெயர் மாற்ற

சித்ரதுர்கா மாவட்டம் பேலகட்டிகெரே கிராமத்தைச் சேர்ந்தவர் திப்பேஷ். இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திப்பேஷின் தந்தை இறந்து விட்டார். இதையடுத்து அவர் தந்தை பெயரில் உள்ள பட்டாவை தனது பெயருக்கு மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளார். இந்தநிலையில் அவரது தந்தை பெயரில் உள்ள பட்டாவை தனது பெயருக்கு மாற்றி தரக்கோரி கிராம பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரி சுரேஷ் என்பவரிடம் விண்ணப்பித்து இருந்தார். விண்ணப்பத்தை ஏற்று கொண்ட கிராம பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரி, பட்டாவின் பெயரை மாற்றுவதற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என திப்பேசிடம் கூறி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த திப்பேஷ் லோக் அயுக்தா போலீசில் புகார் அளித்தார்.

அதிகாரி கைது

இந்த புகாரை ஏற்றுக்கொண்ட லோக் அயுக்தா போலீசார், திப்பேசிடம்ரசாயன பொடி தடவிய ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை கொடுத்து அதனை கிராம பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரி சுரேசிடம் கொடுக்குமாறு சில அறிவுரைகள் கூறி அனுப்பி வைத்தனர்.அதன்படி திப்பேஷ், கிராம பஞ்சாயத்து வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்று சுரேசிடம் ரூ.10 ஆயிரத்தை லஞ்சமாக கொடுத்துள்ளார்.

இந்த பணத்தை சுரேஷ் வாங்கி கொண்டார். அப்போது அங்கு மறைந்து நின்ற லோக் அயுக்தா போலீசார், சுரேசை கையும், களவுமாக பிடித்தனர்.பின்னர் அவரை கைது செய்தனர். மேலும் சுரேசிடம் இருந்து ரூ.10 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சித்ரதுர்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



Next Story