பெங்களூருவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகளிடம் 7 மாதத்தில் ரூ.105 கோடி அபராதம் வசூல்
பெங்களூருவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகளிடம் இருந்து கடந்த 7 மாதத்தில் ரூ.105 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்கே சென்று அபராத தொகையை போலீசார் வசூலிக்கும் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.
பெங்களூரு:
விதிகள் மீறும் வாகன ஓட்டிகள்
பெங்களூருவில் மக்கள் தொகையின் வளர்ச்சிக்கு ஏற்ப வாகனங்களின் எண்ணிக்கையும் பல மடங்கு உயர்ந்து விட்டது. அதே நேரத்தில் பெங்களூருவில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெங்களூருவில் போக்குவரத்து சிக்னல்களை மதிக்காமல் செல்வது, ஹெல்மெட் அணியாமல் செல்வது, குடிபோதையில் வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளை பிடித்து போக்குவரத்து போலீசார் அபராதம் வசூலித்து வருகிறார்கள்.
அதே நேரத்தில் பெங்களூருவில் வாகன ஓட்டிகளை தேவையில்லாமல் தடுத்து நிறுத்தி சோதனை செய்து, அபராதம் விதிக்க போலீசாருக்கு, மாநில போலீஸ் டி.ஜி.பி. தடை விதித்துள்ளார். விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டி வருவது தெரிந்தால், அவர்களை பிடித்து வழக்குப்பதிவு செய்யும்படியும் போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, ஹெல்மெட் அணியாமல் செல்வதுஉள்ளிட்ட விதிமுறைகளை மீறும் இருசக்கர வாகன ஓட்டிகளின், வாகனத்தை செல்போனில் படம் பிடித்து, அபராதம் விதிக்கும் பணிகளும் நடந்து வருகிறது.
ரூ.105 கோடி அபராதம்
இதுதவிர போக்குவரத்து சிக்னல்களில் இருக்கும் நவீன கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் மூலமாக, விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, பெங்களூருவில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து கடந்த ஜூலை மாதம் வரை மட்டும் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 54 லட்சத்து 45 ஆயிரத்து 251 வழக்குகளை பதிவு செய்திருக்கும் போக்குவரத்து போலீசார், அந்த வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ.105 கோடியே 7 லட்சத்து 750-யை அபராதமாக வசூல் செய்துள்ளனர்.
கடநத ஆண்டு (2021) ஒட்டு மொத்தமாக ரூ.140 கோடி32 லட்சத்து 90 ஆயிரத்து 775 அபராதம் வசூலிக்கப்பட்டு இருந்தது. கடந்த 2020-ம் ஆண்டு ரூ.99 கோடியே 57 லட்சத்து 33 ஆயிரமும், கடந்த 2019-ம் ஆண்டு ரூ.89 கோடியே 18 லட்சத்து 84 ஆயிரத்து 635 அபராதம் வசூலிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த ஆண்டு வெறும் 7 மாதத்திலேயே ரூ.105 கோடிக்கு மேல் அபராதம் வசூல் செய்யப்பட்டு இருக்கிறது.
வீடுகளுக்கு சென்று வசூல்
இதற்கு முன்பு விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் தங்களிடம் பணம் இல்லை என்று கூறி வந்தனர். தற்போது அபராதம் செலுத்துவதற்கு ஆன்லைன் மூலம் பணம் செலுத்துவது, செல்போன் செயலிகள் மூலமாக பணம் செலுத்துவது உள்ளிட்ட நடைமுறைகள் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இதுதவிர போக்குவரத்து விதிமுறைகளை அடிக்கடி மீறும் வாகன ஓட்டிகளின் வீடுகளுக்கே நோட்டீசு அனுப்பி வைப்பதுடன், அபராத தொகை எல்லை மீறி செல்லும் வாகன ஓட்டிகளின் வீடுகளுக்கே சென்று போக்குவரத்து போலீசார் வசூலிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுபோன்ற காரணங்களால் விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் இருந்து வசூலிக்கப்படும் அபராதம் அதிகரித்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் வீடுகளுக்கே சென்று அபராதம் விதிக்கும் போலீசாரின் நடவடிக்கைக்கு வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இவ்வாறு தங்களது வீட்டுக்கு போலீசார் வருவதால், தங்களுக்கு அவமானம் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு கூறி வருகின்றனர்.