சண்டிகர் செல்லும் ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக பரவிய வதந்தி - பீதியில் உறைந்த பயணிகள்
சண்டிகர் செல்லும் ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக வதந்தி பரவியதால் பயணிகளிடையே பீதி ஏற்பட்டது.
ஹரித்வார்,
லக்னோ-சண்டிகர் சத்பவானா விரைவு ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக வதந்தி பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பயணிகள் பயங்கர பீதியடைந்தனர்.
முன்னதாக லக்சர் பகுதியில் உள்ள ரைசி ரெயில் நிலையம் அருகே ரெயில் வந்தபோது பங்காங்கா ஆற்றின் மேல் உள்ள ரெயில் பாலத்தில் சிறிது நேரம் நின்றது. அப்போது ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக வதந்தி பரவியது. இதனால் பீதியடைந்த பயணிகள் கீழே இறங்கி, உயிரை பணயம் வைத்து பாலத்தை கடந்து சென்றனர்.
பின்னர் யாரோ ரெயிலில் சங்கிலியை இழுத்ததாகவும் அதன் விளைவாகவே ரெயில் நின்றதாகவும் தெரிய வந்தது. ரெயில் நின்றபோது பிரேக்கில் ஏற்பட்ட சிறிய கோளாறு காரணமாக சக்கரங்களில் இருந்து புகை வெளியேறியதாகவும் அதுவே தீ விபத்து ஏற்பட்டதாக வதந்தி பரவுவதற்கு காரணம் என்றும் லக்சர் ரெயில் நிலைய கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
ரெயில் பாலத்தில் ஏறக்குறைய அரை மணி நேரம் நின்றது. ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பிரேக்குகள் சரி செய்யப்பட்ட பிறகு ரெயில் மீண்டும் புறப்பட்டது.