சபரிமலை அய்யப்பன் கோவில் வெடி வழிபாட்டு மையத்தில் தீ விபத்து - 3 பேர் காயம்
சபரிமலை கோயில் அருகே வெடி வழிபாட்டுக்கான வெடி மருந்து நிரப்பும் மையத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
சபரிமலை,
கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜை விழா தொடங்கி நடந்து வருகிறது. பூஜைக்காக கடந்த 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதும் தளர்த்தப்பட்ட பிறகு மண்டல பூஜை இந்த ஆண்டு வெகுவிமரிசையாக நடைபெறுவதால் பக்தர்கள் கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், சபரிமலையில் வெடி வழிபாட்டுக்கான வெடி மருந்து நிரப்பும் மையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மாலிகைபுரம் அருகே வெடி வழிபாட்டுக்கான வெடி மருந்து நிரப்பும் மையம் உள்ளது. இந்த மையத்தில் இன்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அங்கு பணியாற்றி 3 ஊழியர்கள் காயம் அடைந்துள்ளனர். உடனே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை மீட்டு சன்னிதானத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காயம் அடைந்துள்ள 3 ஊழியர்களில் ஒருவருக்கு 60 சதவீதம் தீக்காயமும், 2 பேருக்கு 40 சதவீதம் தீக்காயமும் ஏற்பட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அதிகம் வரும் அந்த பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.