சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு ரத்து செய்யப்பட்டதா..? திருவிதாங்கூர் தேவஸ்தானம் விளக்கம்
சபரிமலையில் தரிசனம் செய்ய ஆன்லைன், உடனடி முன்பதிவு நடைமுறை தொடரும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் விளக்கமளித்துள்ளது.
திருவனந்தபுரம்,
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்று தரிசனம் செய்து வருகிறார்கள். பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு அடிப்படையில் அனுமதி வழங்கப்படுகிறது.
சபரிமலையில் கூட்டம் கட்டுக்கடங்காமல் வந்ததை தொடர்ந்து நெரிசலை தவிர்க்க தினசரி 90 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே முன்பதிவு செய்யப்படும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதற்கிடையே சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு ரத்து செய்யப்பட்டதாக வதந்தி பரவியது.
இதுகுறித்து திருவிதாங்கூர் தேவஸ்தான அதிகாரிகள் கூறும்போது, 'சபரிமலையில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தினசரி 90 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே முன்பதிவு செய்யப்படும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. 90 ஆயிரத்திற்கு மேல் முன்பதிவு செய்ய முயலும் பக்தர்களின் பதிவு ஏற்கப்படாது. இதனால் ஆன்லைன் முன்பதிவு ரத்து செய்யப்பட்டதாக வதந்தி பரவியது. இதை யாரும் நம்ப வேண்டாம். சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்ல ஆன்லைன் மற்றும் உடனடி முன்பதிவு வழக்கம் போல் தொடரும்' என்றனர்.