சபரிமலைக்கு பக்தர்கள் சென்ற பஸ் கவிழ்ந்து விபத்து: ஆந்திராவை சேர்ந்த சிறுவன்கவலைக்கிடம்; 18 பேர் காயம்


சபரிமலைக்கு பக்தர்கள் சென்ற பஸ் கவிழ்ந்து விபத்து: ஆந்திராவை சேர்ந்த சிறுவன்கவலைக்கிடம்; 18 பேர் காயம்
x
தினத்தந்தி 19 Nov 2022 5:49 PM IST (Updated: 19 Nov 2022 5:57 PM IST)
t-max-icont-min-icon

ஆந்திராவில் இருந்து சபரி மலையை நோக்கி வந்து கொண்டிருந்த பஸ் விபத்தில் சிக்கியதில் சுமார் 40 மேற்பட்ட பயணிகள் லேசான காயமடைந்துள்ளனர். 18 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

சபரிமலை,

ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் இருந்து 44 பக்தர்களுடன் தனியார் பேருந்து ஒன்று சபரிமலைக்கு சென்றுகொண்டிருந்தது. பக்தர்கள் அய்யப்பனை தரிசனம் செய்ய உற்சாகமாக பஜனை பாடியபடி சபரிமலை நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்த பேருந்து பத்தனம்திட்ட மாவட்டம் , லாஹ அருகே விளக்கு வஞ்சி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

சபரிமலைக்கு சென்ற தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 வயது சிறுவன் மணிகண்டன் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் பத்தனம்திட்டா அரசு பொது மருத்துவமனை மற்றும் கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 43 பேரும் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பஸ்சின் அடியில் சிக்கிய 3 பேரை நீண்ட நேர முயற்சிக்கு பின் வெளியே எடுத்தனர்.விபத்தில் சிக்கிய பஸ்சை இரண்டு கிரேன்கள் மற்றும் இரு ஜேசிபி இயந்திரம் மூலம் சாலையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது. பிரேக் செயலிழந்து விபத்து ஏற்பட்டதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து கேரள சுகாதாரத்துறை மந்திரி கூறியதாவது:-

காலை இந்த விபத்து நடந்துள்ளது. சம்ப இடத்தை நானும் நேரில் சென்று பார்வையிட்டுள்ளேன். விபத்தில் சிக்கியவர்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல பஸ் அந்த பகுதியிலிருந்து அகற்றப்பட்டுள்ளது.

இதில் காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும். விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் உட்பட 5 பேர் கோட்டயம் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களில் சிலருக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட உள்ளது. அதேபோல சிறு காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் உரிய சிகிச்சைக்கு பின்னர் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியுள்ளார். அதேபோல இந்த விபத்து குறித்து பேசியுள்ள ஆந்திரப் பிரதேசமுதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி, விபத்து குறித்து அம்மாநில அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசியிருப்பதாக கூறியுள்ளார்.

சபரிமலைக்கு பக்தர்களுடன் சென்ற பஸ் விபத்தில் சிக்கியிருப்பது அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story