சபரிமலை கோவிலில் மகர ஜோதி ஏற்றப்பட்டது- ஜோதி வடிவமாக காட்சி அளித்தார் அய்யப்பன்
சபரிமலைக்கு கொண்டு வரப்பட்ட தங்க ஆபரண பெட்டி 18-ம் படியேறி அய்யப்பனுக்கு அணிவிக்கப்படுகிறது.
திருவந்தபுரம்,
சபரிமலையில் மகரவிளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் இன்று(சனிக்கிழமை) நடக்கிறது. மகரவிளக்கு பூஜையின் போது அய்யப்ப சுவாமிக்கு திருவாபரணம் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து பொன்னம்பல மேட்டில் ஐயப்பன் பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சி அளிப்பார்.
அய்யப்பனுக்கு அணிவிக்கும் தங்க ஆபரணங்கள் அடங்கிய பெட்டி நேற்று முன்தினம் வலியகோய்க்கல் தர்ம சாஸ்தா கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டது. பம்பையில் உள்ள கணபதி கோவிலுக்கு இன்று இந்த ஆபரண பெட்டி வந்தடைந்துள்ளது. அங்கு ஆபரண பெட்டிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அங்கிருந்து தலைச்சுமையாக சபரிமலைக்கு எடுத்துச் வரப்பட்டது.
இந்த தங்க ஆபரண பெட்டியை சரங்கொத்தி பகுதியில் தேவசம்போர்டு அதிகாரிகள் சிறப்பான வரவேற்போடு பெற்றுக் கொண்டு, அதனை சபரிமலைக்கு கொண்டு வந்தனர். அங்கிருந்து ஆபரண பெட்டி 18-ம் படியேறி அய்யப்பனுக்கு அணிவிக்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து இன்னும் சற்று நேரத்தில் பொன்னம்பல மேட்டில் மகரஜோதி வடிவில் பக்தர்களுக்கு அய்யப்ப சுவாமி காட்சி தர உள்ளார். இதனைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை குவிந்துள்ளனர்.