நிதியமைச்சரை உடனடியாக நீக்க வேண்டும்: முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு கேரள கவர்னர் கடிதம்


நிதியமைச்சரை உடனடியாக நீக்க வேண்டும்: முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு கேரள கவர்னர் கடிதம்
x

கோப்புப்படம்

நிதியமைச்சரை உடனடியாக நீக்க வேண்டும் என்று முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் கடிதம் எழுதியுள்ளார்.

திருவனந்தபுரம்,

நிதியமைச்சர் கே.என்.பாலகோபாலை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த வாரம் திருவனந்தபுரத்தில் மாநில நிதியமைச்சர் பாலகோபால் பேசியது இந்தியாவின் ஒற்றுமைக்கு எதிரானதாகவும், பிராந்தியவாதத்தை ஊக்குவிக்கும் வகையிலும் பேசியதாக கவர்னர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் முதல்-மந்திரிக்கு எழுதியுள்ள கடிதத்தில், "நிதியமைச்சர் கே.என்.பாலகோபாலின் பேச்சுகள், அவருக்கு நான் பதவிப் பிரமாணம் செய்துவைத்தபோது அவர் எடுத்த உறுதிமொழியை மீறுவதாக அமைந்துள்ளது. உறுதிமொழியை வேண்டுமென்றே மீறுபவர்கள் அதனை சிறுமைப்படுத்துபவர்கள் பதவியில் இருக்கத் தகுதியானவர்கள் அல்ல. அக்டோபர் 19 ஆம் தேதி திருவனந்தபுரம் பல்கலைக்கழக வளாகத்தில் பேசுகையில், பிராந்தியவாதத்தை தூண்டும் விதமாக பேசியுள்ளார்.

அவர் தேசத்தின் ஒற்றுமையை சிதைக்கும் வகையில் பேசியிருக்கிறார். என் மீது கல்வி அமைச்சர், சட்ட அமைச்சர் என நிறைய பேர் தனிப்பட்ட முறையில் விமர்சனங்களை வைத்திருந்தாலும், அவை என்னை காயப்படுத்தவில்லை என்பதால் நான் அவற்றை கண்டு கொள்ளவில்லை. ஆனால், இப்போது பாலகோபால் பேசியதை நான் கவனிக்கவில்லை என்றால், அது என் பதவிக்கான பொறுப்பை தட்டிக் கழித்ததாகிவிடும். எனவே அவர் மீது கடுமையான நடவடிக்கை அவசியம்" என்று அதில் கவர்னர் ஆரிப் முகமது கான் தெரிவித்துள்ளார்.


Next Story