நாக்பூர்- சம்ருத்தி விரைவு சாலை ஆய்வுக்கு பிறகு சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் - அஜித்பவார்


நாக்பூர்- சம்ருத்தி விரைவு சாலை ஆய்வுக்கு பிறகு சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் - அஜித்பவார்
x

சம்ருத்தி விரைவு சாலை நேராக அமைக்கப்பட்டு இருப்பது டிரைவர்களுக்கு தூக்கத்தை வரவழைக்கிறது என்றும், இதனால் தான் அதிகளவில் விபத்துகள் நடைபெறுவதாகவும் துணை முதல்-மந்திரி அஜித்பவார் கூறினார்.

விரைவு சாலை

நாக்பூர்- மும்பை சம்ருத்தி விரைவு சாலை திட்டம் தற்போது படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது நாக்பூர் மற்றும் இகத்புரி இடையே இந்த சாலை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டு உள்ளது. இந்த சாலையில் அடிக்கடி நடைபெறும் விபத்துகள் உயிரிழப்புகளுக்கு காரணமாக அமைகிறது. முறையான திட்டமிடல் இன்றி சாலை கட்டமைக்கப்பட்டதே இந்த விபத்துகளுக்கு காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்தநிலையில் துணை முதல்-மந்திரி அஜித்பவார் சத்ரபதி சம்பாஜி நகரில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அவரிடம் விரைவு சாலையில் தொடர்ந்து விபத்து அதிகரித்து வருவதற்கான காரணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

தூக்கம் வருகிறது

இதற்கு பதில் அளித்து அவர் கூறுகையில், "நாக்பூர்- மும்பை சம்ருத்தி விரைவுசாலை மிக நேராக இருப்பதால் ஓட்டுனர்களுக்கு தூக்கம் வருகிறது. இதனால் விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த நெடுஞ்சாலையில் சில திருப்பங்களை ஏற்படுத்தியிருந்தால், வாகன ஓட்டிகளுக்கு தூக்கம் ஏற்பட்டு இருக்காது. இதுகுறித்து முழுமையான ஆய்வுக்கு பிறகு சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றார்.


Next Story