கர்நாடக அரசின் அட்வகேட் ஜெனரலாக சசிகிரண் ஷெட்டி நியமனம்?
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்திருப்பதால் கா்நாடக அரசின் அட்வகேட் ஜெனரலாக சசிகிரண் ஷெட்டி நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
பெங்களூரு:-
அட்வகேட் ஜெனரல்
கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சியில் அரசின் அட்வகேட் ஜெனராலாக பிரபுலிங்க நாவதகி இருந்தார். சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடைந்ததை தொடர்ந்து அவர் தனது அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்திருந்தார். தற்போது மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்திருப்பதால் புதிய அட்வகேட் ஜெனரலை நியமிக்க வேண்டும்.
இதுபற்றி நேற்று முன்தினம் நடந்த மந்திரிசபை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அப்போது புதிய அட்வகேட் ஜெனரலை தேர்வு செய்யும் விவகாரத்தை முதல்-மந்திரி சித்தராமையா முடிவு செய்வார் என்று ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டு இருந்தது.
சசிகிரண் ஷெட்டி
இதையடுத்து, கர்நாடக அரசின் புதிய அட்வகேட் ஜெனரலாக கர்நாடக ஐகோர்ட்டு மூத்த வக்கீல் சசிகிரண் ஷெட்டியை நியமனம் செய்ய முதல்-மந்திரி சித்தராமையா முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு தான் அட்வகேட் ஜெனரல் ஆகும் வாய்ப்புள்ளதும் தெரியவந்துள்ளது.
இதுபற்றி ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. இவர், மூத்த வக்கீல் சசிகிரண் ஷெட்டி, லோக் அயுக்தா முன்னாள் நீதிபதி விஸ்வநாத் ஷெட்டியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.