வீர சாவர்க்கரை அவமதித்ததாக ராகுல் காந்தி மீது புகார் அளித்த சாவர்க்கர் பேரன்
வீர சாவர்க்கர் குறித்த சர்ச்சை கருத்து தெரிவித்ததாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீது சாவர்க்கர் பேரன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
மும்பை,
மராட்டியத்தில் நடைபயணம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நேற்று முன்தினம் வாசிம் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது, வீரசாவர்க்கர் ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கேட்டு, அவர்களிடம் இருந்து ஓய்வூதியம் வாங்கியவர் என கூறியிருந்தார். ராகுல்காந்தியின் இந்த பேச்சுக்கு பா.ஜனதா, ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனாவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் வீர சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கர் மும்பை சிவாஜி பார்க் போலீசில் ராகுல் காந்தி மீது புகார் அளித்து உள்ளார். அந்த புகாரில், வீர சாவர்க்கர் பற்றி அவதூறு பரப்பி அவரை அவமதித்துவிட்டதாக கூறியுள்ளார்.
இதேபோல வீர சாவர்க்கரை அவமதித்து பேசியதற்காக, மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலேவுக்கு எதிராகவும் புகார் அளித்து உள்ளார். இருப்பினும் புகார் மீது நேற்று வரை போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை.
முன்னதாக இதுகுறித்து பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சம்பிட் பாத்ரா கூறுகையில், நாட்டின் பெருமையாக விளங்கிய வீர சாவர்க்கரை ராகுல் காந்தி அவமரியாதை செய்திருக்கிறார் . வீர சாவர்க்கர் மிகச் சிறந்த விடுதலைப் போராட்ட வீரர் என முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியே புகழாரம் சூட்டியுள்ளார். இந்திரா காந்தி சொல்வது பொய்யா அல்லது ராகுல் காந்தி சொல்வது பொய்யா என சோனியா காந்தி குடும்பம் விளக்க வேண்டும். தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டு சிறை சென்றார்கள் என சோனியா காந்தி குடும்பம் நினைத்துக் கொண்டிருக்கிறது. வீர சாவர்க்கர் குறித்து அவதூறாகப் பேசியதற்காக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்" என்றும் அவர் தெரிவித்தார்.