புதுச்சேரி: சாலை விபத்து குறித்து சுப்ரீம் கோர்ட்டின் உயர்மட்டக்குழு ஆய்வு - போக்குவரத்து துறை மந்திரி தகவல்


புதுச்சேரி: சாலை விபத்து குறித்து சுப்ரீம் கோர்ட்டின் உயர்மட்டக்குழு ஆய்வு - போக்குவரத்து துறை மந்திரி தகவல்
x

புதுச்சேரியில் ஏற்படும் விபத்து விகிதம் குறித்து சுப்ரீம் கோர்ட்டின் உயர்மட்டக்குழு ஆய்வு மேற்கொண்டு வருவதாக போக்குவரத்து மந்திரி சந்திர பிரியங்கா தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

சாலை விபத்துக்கள் அதிகமாக ஏற்படும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் விபத்து விகிதம் குறித்து ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட்டு உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளது. இந்த குழுவானது, அதிக விபத்துகள் நடக்கும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், புதுச்சேரியில் ஏற்படும் விபத்து விகிதம் குறித்து சுப்ரீம் கோர்ட்டின் உயர்மட்டக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பாக புதுச்சேரி போக்குவரத்து துறை மந்திரி சந்திர பிரியங்கா கூறுகையில், சாலை விபத்துகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் புதுச்சேரியும் ஒன்றாக உள்ளது. எனவே உயர்மடடக் குழு இங்கு முகாமிட்டு, விபத்து ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்து மதிப்பீடு செய்து வருகின்றனர்.

புதுச்சேரியில் பைக்கில் பயணிப்போரின் பாதுகாப்பை உறுதி செய்யவும், விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்கும் வகையில் தலைகவசம் அணிவதை அரசு கட்டாயமாக்கி உள்ளது.

மேலும், கனரக வாகனங்களை இயக்குவதற்கென்று குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க அரசு திட்டமிட்டுள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இருக்க, பள்ளியின் நேரத்தை மாற்றி அமைக்குமாறு நிர்வாகங்களிடம் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் சாலை விபத்துக்கள் மூலம் அதிக உயிரிழப்பு ஏற்படும் மாநிலமாக சத்தீஸ்கர் (59 சதவீதம்) உள்ளது. இதற்கு அடுத்தப்படியாக 2-வது இடத்தில் புதுச்சேரி (58 சதவீதம்) உள்ளது. புதுச்சேரியில் கடந்த 2019 முதல் 2021 வரை சுமார் 3 ஆயிரத்து 410 சாலை விபத்துகள் நடந்துள்ளன.


Next Story