முதல்-மந்திரி பதவியில் இருந்து நிதிஷ்குமாரை நீக்கக் கோரிய மனு- சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி
பீகார் முதல் மந்திரி பதவியில் இருந்து நிதிஷ்குமாரை நீக்கக் கோரி சந்தன் குமார் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.
புதுடெல்லி,
பீகார் முதல் மந்திரி பதவியில் இருந்து நிதிஷ்குமாரை நீக்கக் கோரி சந்தன் குமார் என்பவர், சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அதை நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் எம்.எம்.சுந்திரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
மனுதாரர் சார்பில் வாதிடுகையில் கூறியதாவது:-
பீகார் முதல் மந்திரி பதவியில் இருக்கும் நிதிஷ்குமாரது நியமனம், இந்திய அரசியலமைப்பின் பல்வேறு விதிகளை முற்றிலும் மீறுவதாகும். இந்த ஆண்டு ஆகஸ்டில் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் (ஆர்ஜேடி) தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை அவர் உருவாக்கினார். இதன்மூலம், தேர்தலுக்கு முந்தைய கூட்டணியை உடைத்துவிட்டு அவர் வாக்காளர்களை ஏமாற்றி விளையாடினார்.
அரசியல் தலைவர்கள் தேர்தலுக்கு முந்தைய கூட்டணியை அமைத்துவிட்டு, தேர்தலுக்கு பின் கட்சியின் திட்டங்களை மீறி பதவிக்கு வர ஆசைப்பட்டு தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைத்து இத்தகைய சுயநலமிக்க நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். ஆகவே தேர்தலுக்கு முந்தைய கூட்டணிகள் சிதறாமல் இருக்க நாடாளுமன்றம் முறையான சட்டத்தை உருவாக்க வேண்டும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 10வது அட்டவணையில் திருத்தம் செய்ய நாடாளுமன்றத்திற்கு உத்தரவிடுமாறு மனுதாரர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வாதிடப்பட்டது.
இதற்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கூறியதாவது:-
தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை அரசியலமைப்புச் சட்டம் சில நிபந்தனைகளுடன் அனுமதிக்கிறது. ஆகவே இந்த மனுவில் கூறப்பட்டுள்ளதை ஏற்க முடியாது என்று கூறிய சுப்ரீம் கோர்ட்டு, பீகார் முதல் மந்திரி பதவியில் இருந்து நிதிஷ்குமாரை நீக்கக் கோரிய பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது.