ஜல்லிக்கட்டுக்கு எதிரான சீராய்வு மனு - விசாரணைக்கு பட்டியலிட சுப்ரீம் கோர்ட்டு பரிசீலனை


ஜல்லிக்கட்டுக்கு எதிரான சீராய்வு மனு - விசாரணைக்கு பட்டியலிட சுப்ரீம் கோர்ட்டு பரிசீலனை
x

ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சிறப்பு சட்டம் கொண்டுவந்தது.

டெல்லி,

ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் வகையில் கடந்த 2017ம் ஆண்டு தமிழ்நாடு அரசு சிறப்பு சட்டம் கொண்டுவந்தது. இதையடுத்து, ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு கொண்டுவந்த சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத்தொடரப்பட்டது. இந்த வழக்கை கடந்த ஆண்டு மே 18ம் தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு கொண்டுவந்த சட்டம் செல்லும் என்று அதிரடி தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து அபிஷேக் சிங்வி என்ற வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த சில மாதங்களாக விசாரணைக்கு பட்டியலிடப்படாமல் நிலுவையில் இருந்தது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு கொண்டுவந்த சிறப்பு சட்டம் செல்லும் என்று வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மறுசீராய்வு மனுவை விசாரணைக்கு பட்டியலிடுவது குறித்து பரிசீலிப்பதாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி இன்று தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ஜல்லிக்கட்டுக்கு எதிரான சீராய்வு மனுவை விசாரணைக்கு பட்டியலிடுவது குறித்து பரிசீலிப்பதாக சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ள நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story